பாளையங்கோட்டை அருகே கார் கவிழ்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (72). இவரது மகன் பார்வதிமுத்து (36). இவர் கோவையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார்.
இந்நிலையில், திசையன்விளையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாராயணன், பார்வதிமுத்து, அவரது மகன் தீனதயாளன் உள்ளிட்டோர் காரில் சனிக்கிழமை திசையன்விளை வந்தனர். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் காரில் கோவைக்கு புறப்பட்டுச் சென்றனர். காரை பாலமுருகன் ஓட்டினார். பாளையங்கோட்டையில் நான்குவழிச் சாலையில் வந்தபோது, அணுகுசாலையில் அமைக்கப்பட்டிருந்த நடைமேடை தடுப்பில் மோதிய கார் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் நாராயணன், ஜெயராஜ் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நாராயணன் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
காயமடைந்த வழக்குரைஞர் சாவு: பாளையங்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த மாசானம் மகன் சுரேஷ்குமார் (37). வழக்குரைஞரான இவர், சில மாதங்களுக்கு முன் பாளையங்கோட்டையில் நீதிமன்றம் முன் சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்தார்.
மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
நன்றி: தினமணி