Breaking News

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் வலியுறுத்தல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றார் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவரும், ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஐ.எஸ். இன்பதுரை.
நான்குனேரி, ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஐ.எஸ். இன்பதுரை தலைமையில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள் வாசுதேவநல்லூர் அ. மனோகரன், ஊத்தங்கரை மனோரஞ்சிதம், ஜெயங்கொண்டான் ராமஜெயலிங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
நான்குனேரி தொகுதி பொன்னாக்குடி, திசையன்விளை, உவரி, விஜயாபதி, கூடங்குளம், பணகுடி, வள்ளியூர் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரூ. 872.45 கோடியில் நடைபெற்று வரும் தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் திட்டப் பணிகள், தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகளை பொன்னாக்குடி பகுதியில் பேரவைக் குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், திசையன்விளையில் மனோ கல்லூரிக்கு ரூ. 2.10 கோடியில் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, உவரி கப்பல்மாதா ஆலயம் அருகே ரூ. 12.50 லட்சத்தில் கட்டப்பட்டுவரும் சுகாதார வளாகம், ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் காத்திருக்கும் அறை, ரூ. 14 லட்சத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு, நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி, உவரியில் ரூ. 500 கோடியில் கட்டப்பட்டு வரும் தூண்டில் வளைவுப் பணி, திருவம்பலாபுரம் அருகே நம்பியாற்றின் குறுக்கே ரூ. 4 கோடியில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தனர். மேலும், சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள விஜயாபதி விசுவாமித்திரர் கோயில் அருகே ரூ. 12.50 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் அமைக்கவும், ரூ. 13.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கும் அடிக்கல்நாட்டி பணிகளைத் தொடங்கிவைத்தனர்.
தொடர்ந்து, உறுதிமொழிக் குழுவினர் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதைத்தொடர்ந்து, பணகுடி பேரூராட்சி சத்திரம் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ. 6.10 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம், வள்ளியூரில் பழைய பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையையொட்டி, ரூ. 15 லட்சத்தில் அமைக்கப்பட்டு வரும் சிறுவர் பூங்கா பணிகளையும் குழுவினர் ஆய்வு செய்தனர். பிறகு, சட்டப்பேரவை உறுதிமொழி குழுத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியது:
நான்குனேரி வட்டம், ராதாபுரம் தொகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தோம். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்ட பணிகளை ஆய்வு செய்துள்ளோம்.
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் உறுதிமொழி தொடர்பாக வரப்பெற்ற 201 வினாக்கள் தொடர்பான அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை (அக். 31) நடைபெறவுள்ளது.அனைத்து வளர்ச்சிப் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டு விரைந்து முடிக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
ஆய்வுக் குழுவினருடன், மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், திருநெல்வேலி கோட்டாட்சியர் மரு. மணிஷ் நாரணவரே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ. பழனி, செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், ராதாபுரம் அதிமுக ஒன்றியச் செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம், நான்குனேரி கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் முருகேசன், திசையன்விளை வட்டாட்சியர் தாஸ்பிரியன், மீன்வளத் துறை உதவி இயக்குநர் ராஜதுரை, திசையன்விளை பேரூராட்சி செயல் அலுவலர் பாபு, திசையன்விளை மனோ கல்லூரி முதல்வர் பிரேம் அரசன் ஜெயராஜ், வள்ளியூர் தவசிமுத்து, கல்யாணசுந்தரம், தங்கையா கணேசன், சுயம்புராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி  : தினமணி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன