மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பதிவாளர் ஜான் டி பிரிட்டோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் கூறியது: திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சேரன்மகாதேவி, பணக்குடி, திசையன்விளை, புளியங்குடி, நாகம்பட்டியில் உள்ள சுந்தரனார் பல்கலைக் கழக கல்லூரிகளில் 2016-17ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இதேபோல கடையநல்லூர், சாத்தான்குளம், நாகலாபுரம், கன்னியாகுமரியில் உள்ள பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளிலும் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்புகளை பல்கலைக் கழக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பக் கட்டணம், பதிவுக் கட்டணம் செலுத்திய ரசீதுகளுடன் உரிய சான்றிதழ்களை இணைத்து, அந்தந்த கல்லூரி முதல்வர்களிடம் வழங்க வேண்டும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நாள்களுக்குள் விண்ணப்பங்களை வழங்கவேண்டும். மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட 10 நாள்களுக்கு பிறகு அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் உருவாக்கப்பட்டு, இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.
நன்றி: தினமணி