திசையன்விளை
நெல்லை மாவட்டம் திசையன்விளை நெடுஞ்சாலை தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முரளி (வயது 19). இவர் காமராஜர் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தனர். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து அவர் கணவருடன் சேர்ந்து வசித்து வந்தார். தன்னை திருமணம் செய்யாமல் வேறொருவரை திருமணம் செய்ததால் முரளி ஆத்திரமடைந்தார். இது பற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறினார்.
இதையடுத்து அந்த பெண்ணை பழிவாங்க திட்டமிட்ட முரளி மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ்குமார், அவரது தம்பி நடேசன்(20), அவர்களது தந்தை சுந்தர் (49) ஆகியோர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், நீ முரளியிடம் சேர்ந்து எடுத்த போட்டோ மற்றும் செல்போனில் பேசிய விவரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே இது பற்றி கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதுபற்றி அந்த பெண் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராபர்ட் வழக்கு பதிவு செய்து முரளி, சுந்தர் மற்றும் சுந்தரின் மகன்கள் தினேஷ்குமார், நடேசன் ஆகியோரை கைது செய்தார்.
நன்றி: மாலைமலர்