Breaking News

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு

திசையன்விளை,

திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), அவரது கணவர் ஹசரத் சேகு முகமது (ஒலி) ஆகியோர் தர்காவாகும். ஆண்டுதோறும் இங்கு கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவையொட்டி காலையில் குர்ஆன் தமாம் செய்தல் நடந்தது. தொடர்ந்து 10 மணிக்கு அரண்மனை புலிமான்குளத்தில் இருந்து யானை மீது சந்தனக்குடம், கொடி முதலியவற்றை பரம்பரை டிரஸ்டி கபிபுர் ரகுமான் பிஜிலி, அசிம் அகமமது பிஜிலி ஆகியோர் பாண்டுவாத்தியம் முழங்க ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு சென்றனர்.

வழியில் முத்துகிருஷ்ணாபுரத்தில் அருள்துரை நாடார் என்பவருடைய வீட்டில் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து காணிக்கை செலுத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. இது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. மதியம் 12 மணிக்கு தர்காவை அடைந்த சந்தனக்குட ஊர்வலத்திற்கு பக்தர்கள், நர்ரே தக்குபீர் அல்லாகு அக்பர் என கோஷமிட்டு வரவேற்றனர். 12.15 மணிக்கு பரம்பரை டிரஸ்டி கபிபுர் ரகுமான் பிஜிலி பள்ளிவாசல் முன்பு யானையில் இருந்தபடி கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து தர்காவில் உள்ள நினைவிடங்களில் சந்தனம் மொழுகுதல் நடந்தது.

இன்னிசை கச்சேரி

பின்னர் இரவில் இஸ்லாமிய இன்னிசை கச்சேரி மற்றும் சமய சொற்பொழிவு முதலியவை நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளானவர்கள் கலந்துகொண்டனர். வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் நயாஸ் அகமது பிஜிலி, கபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்திருந்தனர். இன்று காலை நேர்ச்சை வினியோகம் நடக்கிறது.
நன்றி : தினத்தந்தி

About Eesu

மறுமொழியொன்றை இடுங்கள்