திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் முத்தையா ஆவணக்கொலை செய்யப்பட்டதாக புகாரில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முத்தையா ஜாதிய படுகொலை செய்யப்படவில்லை என்றும் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொலை செய்யப்பட்ட முத்தையா, சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார்; முத்தையாவின் உறவினரால் அப்பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது,
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல்நிலைய சரகம் அப்புவிளை. சாமிதாஸ் நகரை சேர்ந்த பலவேசம் மகன் கன்னியப்பன் என்பவர் 23.07.2023-ம் தேதி இரவு திசையன்விளை காவல்நிலையம் ஆஜராகி கொடுத்த புகார் மனுவில் தனது மகன் முத்தையா, வேறு சமுதாயத்தை சார்ந்த ஒரு பெண்ணை காதலித்ததாகவும், 23.07.2023-ம் தேதி அன்று இரவு தனது மகன் ஓடக்கரை பாலம் அருகில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகவும். தனது மகன் காதலித்த பெண்ணின் குடும்பத்தை சார்ந்தவர்கள் ஜாதி வெறியில் கொலை செய்துள்ளதாகவும் நடவடிக்கை எடுக்க கேட்டு கொடுத்த மனுவின் பேரில் உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் பின்பும் 22.07.2023-ம் தேதி மதியம் சுரேஷின் தங்கையை முத்தையா கிண்டல் செய்து தன்னை காதலிக்க வற்புறுத்தியதாகவும் அதனை அவரின் தங்கை சுரேஷிடம் அழுது கொண்டே சொன்னதாகவும், இதனால் அவன் உயிருடன் இருக்கும்வரை தங்கையிடம் பிரச்சனை செய்து கொண்டிருப்பான் என்று எண்ணி தனது உறவினர்களான மதியழகனிடமும், ஜெயபிரகாஷிடமும் தெரிவித்து மூவருமாக சேர்ந்து 23.07.2023-ம் தேதி இரவு சம்பவ இடத்தில் சென்றனராம்.
அப்போது முத்தையாவும் அவன் நண்பரும் பேசிக் கொண்டிருந்ததாகவும், முத்தையாவிடம் சென்று சுரேஷ் தனது தங்கையை கிண்டல் செய்தது பற்றி கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டதாகவும், அவர்கள் மூவரும் தாக்கியதில் முத்தையாவுடன் நின்றிருந்த அவரது நண்பர் சிறு காயத்துடன் ஒடி விட்டதாகவும். முத்தையாவிற்கு குத்து காயங்கள் ஏற்பட்டு இறந்ததாகவும். தெரியவந்தது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு, இரண்டு எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டும், ஒரு எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விசாரணையில் இவ்வழக்கில் மரணமடைந்தவரும் மற்றும் அனைத்து எதிரிகளும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்களுக்கிடையிலான தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இக்கொலை நடைபெற்றுள்ளது தெரிய வருகிறது. கொலையுண்ட நபரின் தந்தை கன்னியப்பன் என்பவர் அவரது மனுவில் தனது மகனின் மரணம் ஜாதிய வெறியில் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டு இருப்பினும் விசாரணையில் இது ஜாதிய படுகொலை இல்லை என தெரிய வருகிறது.” இவ்வாறு காவல்துறை வெளியிட்ட அறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.