காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலில் போட்டியிடாதது அவரது சொந்த விருப்பம். ஆனால் ஜாதி ரீதியாக அவர் சொல்லியிருக்கும் காரணம், தமிழக தேர்தல் அரசியலை சற்று தரம் தாழ்த்திவிட்டது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது சுற்றுப்பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வதின் மூலம், தமிழக தேர்தல் பிரசாரத்தின் போக்கு மாறியிருக்கிறது. திமுக ஆதரவு எழுச்சியாக வெளிப்படுகிறது. ஸ்டாலின் சுற்றுப்பயணம் உயிரோட்டமாக இருப்பதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.
மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் பிரசாரத்திற்கு செல்கிற இடத்தில் மக்கள் ஆதரவு இல்லை என்பதை தெரிந்து, வர இருக்கிற தோல்விக்கு புதிய காரணத்தை தேடுகிறார்கள். வைகோ தனது சொந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தன்னை எதிர்த்து போட்டியிடுபவரை எதிர்கொள்ள முடியாது என்பதை தெரிந்து கொண்டு, அவரால் ஜாதி கலவரம் உருவாகும் என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். தோல்வி பயத்தாலும், திமுக தலைவர் கருணாநிதி மீது ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்ச்சியாலும் ஜாதி கலவரத்தை தூண்ட நினைக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்கின்றனர். அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜாதி ரீதியாக யாரும் பேசியது இல்லை. எனவே வைகோ கூறிய கருத்தை உடனே வாபஸ் பெறவேண்டும். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் ஜாதிய போர்வையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஜாதி ஒழிப்பு கொள்கையில் முன்னோடியாக உள்ளவர்கள். வைகோவின் கருத்தில் உடன்பாடு இல்லை என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமாகா கொள்கை பரப்பு செயலாளர், மாவட்ட கவுன்சிலர் குமரேச பண்ணையார் தலைமையில் பொதுக்குழு உறுப்பினர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர் சர்வோதயம் முத்துப்பாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர் நயினார், நாங்குநேரி நகர தலைவர் செல்லபாண்டி, வட்டார தலைவர் தங்கராஜா உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், பீட்டர் அல்போன்ஸ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
திசையன்விளை முன்னாள் பஞ். தலைவர் சேம்பர் செல்வராஜ், இடைகால் மாரியப்பன், பாளை ஜெயம், அமீர்கான், அந்தோணி செல்வராஜ், முரளி ராஜா, கவுன்சிலர் உமாபதிசிவன், ராஜீவ்காந்தி, ஜேம்ஸ்போர்டு உடன் இருந்தனர்.
நன்றி: தினகரன்