தேமுதிக தலைவர் விஜயகாந்தை நம்பி வாக்களித்தால் தமிழ்நாட்டில் 25 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
ராதாபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.சிவனனைந்த பெருமாளை ஆதரித்து வள்ளியூர் பழைய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவர் மேலும் கூறியதாவது:
தொகுதி முன்னேற்றமடைய வேண்டும், தொகுதி மக்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தல் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில், தொழில் வாய்ப்புகள் இல்லை. பெண்கள் அரசு கலைக் கல்லூரி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு, புறவழிச்சாலை மேம்பாலம், அதிசய பனிமாதா ஆலயத்தை சுற்றுலாத் தலமாக்க வேண்டும், அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என பல்வேறு பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை மக்கள் கூறினர். இந்தக் கோரிக்கைகளை எல்லாம் வேட்பாளர் சிவனனைந்தபெருமாள் வெற்றி பெற்றதும் நிறைவேற்றுவார்.
ஒரு கட்சி பணத்தையும், இன்னொரு கட்சி பிளவுபடுத்துவதையும் நம்பி உள்ளன. ஆனால், மக்கள் நலக் லகூட்டணி மக்களை நம்பி இருக்கிறது. அதிமுகவும், திமுகவும் நல்லாட்சி தரவில்லை. எனவே, முரசு சின்னத்தில் வாக்களித்து விஜயகாந்தை வெற்றிபெறச் செய்யுங்கள். ஒருமுறை வாய்ப்பு தந்து பாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாக படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிப்போம். 25 லட்சம் பெண்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர்.
திசையன்விளையில்…
திசையன்விளையில் பிரேமலதா பேசியதாவது: ராதாபுரம் தொகுதி முழுவதையும் இன்று (வியாழக்கிழமை) பாôóவையிட்டேன். கடந்த தேர்தலில் தேமுதிகவில் நின்று வெற்றிபெற்ற மைக்கேல் ராயப்பன், தன்னால் தொகுதிக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை எனக் கூறி அதிமுகவுக்கு சென்றார். அங்கு சென்ற பிறகும் அவர் ஒன்றும் செய்யவில்லை.
விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தவுடன் மாதந்தோறும் ஒரு மாவட்டம் எனப் பார்வையிட்டு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகிறதா என ஆய்வு செய்வார் என்றார் அவர்.
நன்றி: தினமணி