நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. திசையன்விளை தாலுகாவில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கபட்டுள்ளது. குறிப்பாக திசையன்விளை தாலுகாவில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், செல்போன் இணைப்பு சேவைகளும் கிடைக்காததால் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் உவரி, குட்டம், இடையன்குடி உள்ளிட்ட சுற்று வட்டாரபகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் தகவல் தொடர்பும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பி.எஸ்ன்.எல் சிம் கார்டு இணைப்பு வைத்திருப்பவர்கள் அழைப்புகளை மேற்கொள்ள முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதாலும் இன்று மதியம் முதலே பி.எஸ்.என்.எல் மட்டுமின்றி பிற செல்போன் இணைப்பு வைத்து இருப்பவர்களும் இணைய சேவை சரிவர கிடைக்காததால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் கடற்கரையோர பகுதிகளான உவரி, குட்டம், பெரியதாழை, கூடுதாழை இடையன்குடி ஆகிய பகுதிகள் அதிக அளவு வறட்சியை எதிர்கொண்ட பகுதிகளாகும். பருவமழை அடிக்கடி பொய்த்து போகும் இந்தப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே விடாமல் கொட்டி வரும் மழை அப்பகுதி மக்களை மகிழ்ச்சியிலும் கவலையிலும் ஒரு சேர ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், மழை மறைவு பகுதிகளான அப்பகுதியில் சுண்ணாம்பு, மண் கலவைகளால் கட்டப்பட்ட பல வீடுகளை காண முடியும். அதுபோக தற்போது விடாது பெய்து வரும் மழையால் அங்குள்ள வீடுகள் பலவீனம் அடைந்து இடிந்து விழுமோ என்ற அச்சமும் அங்குள்ள மக்கள் மத்தியில் நிலவுகிறது. தற்போதும் அங்கு விடாமல் மழை பெய்து வருகிறது. இரவு நேரத்தில் தான் மிக அதிக மழை பெய்யும் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், மின்சாரமும் தொலைதொடர்பு சேவையும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கூட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முடியாத நிலையே இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால், தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின்விநியோகம் வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்றாலும் குறைந்தபட்சம் ஆபத்தான கட்டிடங்களில் வசிக்கும் மக்களை திருமண மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்கள் என பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திசையன்விளை – நாங்குநேரி சாலையில் நந்தன்குளம் தாம் போதி பாலம் பலத்த மழை காரணமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திசையன்விளை போலீசார், மக்களின் பாதுகாப்பு கருதி மன்னார்புரம் சந்திப்பு திசையன்விளை இசக்கியம்மன் கோவில் சந்திப்பு பகுதிகளில் பேரிகாட் அமைத்து போக்குவரத்தை மாற்றுவழியாக செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.