திங்கள் , ஜூன் 01,2015
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழாவில், கடல் மணல் சுமந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
விசாக திருவிழா
தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் குறிப்பிடத்தக்கது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்பு லிங்க சுவாமி கோவில்.
சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ஆண்டு தோறும் இங்கு வைகாசி விசாக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 4 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து அபிஷேகம், மதியம் 16 வகை உபச்சாரங்களுடன் சிறப்பு பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தன.
கடல் மணல் சுமந்தனர்
நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடல் மணலை பெட்டியில் சுமந்து வந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். அந்த மணல் கடற்கரையில் குன்று போல் காட்சியளித்தது.
பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சந்தனம் பிரசாதமாக வழங்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதா கிருஷ்ணன் செய்து இருந்தார்.
விசாக திருவிழாவையொட்டி மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நேற்று கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
நன்றி: தினத்தந்தி