உடுமலை;உடுமலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர். இதில், 10 வயது சிறுவன் உயிரிழந்தான்.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் அருண்கேசவன், 43; பொள்ளாச்சி அடுத்த ஊஞ்சவேலன்பட்டியில், பலகாரக்கடை கடை நடத்தி வருகிறார். இவர், 15 ஆண்டுகளுக்கு முன், உடுமலையைச் சேர்ந்த சுதாவை, 33, காதல் திருமணம் செய்து கொண்டார்.உடுமலை ஏரிப்பாளையத்தில் குடியிருந்து வரும் இவர்களுக்கு, 10 மற்றும் ஆறு வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
சுதாவின் தாயார் பழனியம்மாளும், 60, அவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அருண்கேசவன், இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். மனைவி சுதா, சிறுநீரகம் தானம் செய்ய, அறுவை சிகிச்சையில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டது. இருப்பினும், பூரண குணமடையாமல், அருண்கேசவன் அவதியடைந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை, அருண்கேசவன், கடைக்கு சென்றபோது மொபைல் போனில் அவரைத் தொடர்பு கொண்ட மாமியார், ‘நாங்கள் அனைவரும் விஷம் சாப்பிட்டோம்’ என்று தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது நண்பர் ஜெயபால் உதவியுடன், அனைவரையும் மீட்கச் செய்து, உடனடியாக உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.இதையடுத்து, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இருப்பினும், சிறுவன் சுரேஷ்கார்த்திக், 10, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.விசாரணையில், சிறுநீரக பாதிப்பால் அவதியடைந்து வரும் அருண்கேசவனின் நிலையைக் கண்டு தாங்க முடியாமலேயே, குடும்பத்தார் அனைவரும் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர் என்று தெரியவந்தது.
நன்றி : தினமலர்