தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் “ஓம் காளி… ஜெய் காளி” என விண்ணை முட்ட கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குலசேகன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடணுறை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இந்த திருவிழா நாள்களில் தினமும் காலையில் அபிஷேகம் மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் ரத வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் 10-ம் நாளான நேற்று (19.10.18) இரவு 11 மணிக்கு மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் விரித்த சடை முடியுடன், கையில் திரிசூலம் ஏந்தி வதம் செய்ய கடற்கரை நோக்கிப் புறப்பட்டார். அம்பாள் புறப்பட்டபோதே, கைகளில் ஆயுதங்கள் ஏந்திய மகிஷாசூரனும் அம்பாளை எதிர்த்து நின்றபடியே போருக்குப் புறப்பட்டார்.
மகிஷாசூர வதத்தினைக் காண வந்திருந்த பக்தர்கள் மாலை 6 மணி முதலே கடற்கரையில் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்குப் போர் துவங்கியது. முதலில் மகிஷாசூரன் இரண்டாவதாக சிங்கமுகன், மூன்றாவதாக எருதுமுகன் மற்றும் இறுதியாகச் சேவல் முகம் வதம் நடைபெற்றது. ஒவ்வொரு முறை வதம் நடைபெற்ற போதும், “ஓம் ஓம் காளி.. ஜெய் காளி ஜெய் காளி..” என கோஷம் எழுப்பியும், குலவைச் சத்தம் எழுப்பியும் பரவசம் அடைந்தனர். உலகத்தில் தர்மத்தைக் காத்து, அதர்மத்தை அடியோடு வீழ்த்த இந்த வதத்தை அம்பாள் செய்வதாக ஐதீகம் எனச் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து, கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்தில் அம்பாளை சாந்திப்படுத்தி குளிர்விக்கும் விதமாகப் பால் அபிஷேகமும், விசேஷ தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், சிதம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து தேரில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (20.10.18) காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு தசரா திருவிழாவுக்காக ஏற்றப்பட்ட கொடிப்பட்டம் இறக்கப்படுகிறது. இத்துடன் நிறைவு பெறுகிறது திருவிழா.
நேற்று (19.10.18) காலை முதலே குலசை ஊர் நுழைவு வாயில் துவங்கி முத்தாரம்மன் கோயில் வளாகம், கடற்கரைப் பகுதி வரை திரும்பிய திசையெங்கும் பக்தர்களின் தலைகளாகவே தென்பட்டது. மகிஷாசூரசம்ஹாரத்தைக் காணத் தூத்துக்குடி மட்டுமல்லாமல் நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குலசை நோக்கி வாகனங்களில் படையெடுத்ததால் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலை, திசையன்விளை – திருச்செந்தூர், உடன்குடி – குலசை ஆகிய சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
நன்றி : விகடன்