சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை வேறு பணிமனையுடன் இணைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.
திருநெல்வேலிலி கோட்டம், தூத்துக்குடி மண்டலம் சாத்தான்குளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கடந்த ஆண்டு மார்ச் 8 அம் தேதி தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது. அப்போது பணிமனை மேலாளர் உள்ளிட்ட சில ஊழியர்களும், 3 பேருந்துகளும் இந்த பணிமனைக்கு ஒதுக்கப்பட்டன.
எனினும், இந்தப் பணிமனையில் குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்துவந்தனர். பிரதான சாலையில் இருந்து பணிமனைக்கு செல்லும் கிளை சாலையில் மின்விளக்கு அமைக்கவும் வலிலியுறுத்தப்பட்டு வந்தது. இங்கு தற்போது வரை 5 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதுடன், குறைந்த அளவே ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
முன்னதாக, இந்தப் பணிமனையில் இருந்து மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட நீண்ட தொலைவில் உள்ள நகரங்களுக்கு கூடுதலாகப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.
இதற்கிடையே, போதிய பேருந்துகள் மற்றும் ஊழியர்கள் இல்லாததால், பணிமனை நஷ்டத்தில் இயங்குவதாகக் காரணம் கூறி, இந்தப் பணிமனையை திருவைகுண்டம் அல்லது திசையன்விளை போக்குவரத்துக் கழகப் பணிமனையுடன் இணைக்கவும், இந்த இடத்தை பேருந்துகளின் டயர்களைப் புதுப்பிக்கும் தொழிற்சாலையாக மாற்றவும் திட்டமிடப்பட்டு, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சாத்தான்குளத்தில் திமுக ஒன்றியச் செயலர் ஏ.எஸ். ஜோசப் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் நகரத் தலைவர் க. வேணுகோபால், மார்க்சிஸ்ட் ஒன்றியக் குழு உறுப்பினர் அ. பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சாத்தான்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்துக் கழகப் பணிமனையை எக்காரணம் கொண்டும் வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது. இந்த இடத்தில் டயர் புதுப்பிக்கும் தொழிற்சாலை அமைத்தால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என்பதால், அதை இப்பகுதியில் அனுமதிக்கக் கூடாது, பணிமனையை விரிவுபடுத்தி, கூடுதலாக பேருந்துகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும், பணிமனையை மாற்றம் செய்ய உள்ளதை கண்டித்து சாத்தான்குளத்தில் வரும் 21 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அனைத்து கட்சியினரும் திமுக ஒன்றியச் செயலர் ஏ.எஸ். ஜோசப் தலைமையில், சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் சுவாமிநாதனிடம் இதுகுறித்து மனு அளித்தனர்.
இதில், தமாகா வட்டாரத் தலைவர் சேவியர் சுதாகர், நகரத் தலைவர் விஜய், திமுக நகரச் செயலர் மகா. இளங்கோ, மாவட்ட பிரதிநிதி லெ.சரவணன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றியச் செயலர் ஆர்.எஸ்.எஸ். ராஜ்மோகன், மனித மக்கள் கட்சி ஒன்றியச் செயலர் தௌபீக், இந்திய கம்யூனிஸ்ட் ராஜகோபால், காங்கிரஸ் வட்டாரத் தலைவர்கள் சக்திவேல் முருகன், லூர்து மணி, மாவட்ட துணைத் தலைவர் வி.பி. ஜனார்த்தனம், மாவட்ட செயலர் து. சங்கர், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் அந்தோணிராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலர் ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் வேம்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி : தினமணி