செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / குறிப்புகள் / சுகாதார கேடுகளால் வள்ளியூரில் சீரழிந்து வரும் சந்தை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு

சுகாதார கேடுகளால் வள்ளியூரில் சீரழிந்து வரும் சந்தை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு

வள்ளியூரில் காய்கறி மற்றும் கால்நடை கழிவுகளால் கசங்கி கந்தலாக சுகாதார கேடுடன் காட்சியளிக்கும் சந்தையால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் சரித்திரத்தோடு தொடர்புகொண்ட வள்ளியூர் சமீபகாலமாக சந்தித்து வரும் பெரும் குறை சுகாதார கேடு. போதிய வாறுகால்கள், கழிவுநீரோடைகள் இல்லாததாலும், ஓடை, கால்வாய்களை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளதாலும் நகரம் நரகமாக மாறி வருகிறது. நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இவ்வூரில் நீதிமன்றம், டிஎஸ்பி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் பிரபலமான சந்தையும் உள்ளது.

வாராவாரம் திங்கள்தோறும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் வியாபாரம் களைகட்டும். வெள்ளிக்கிழமைகள்தோறும் காய்கறிகள், மளிகை சாமான்கள், ஓலை, நார்பெட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனைக்காக குவிக்கப்படுகின்றன.
திங்கட்கிழமை நடைபெறும் கால்நடை சந்தைக்கு நெல்லை மாவட்டம் திசையன்விளை, ராதாபுரம், களக்காடு, நாங்குநேரி, சேரன்மகாதேவி, கூடங்குளம், உவரி, ஏர்வாடி, பணகுடி உள்ளிட்ட நகரத்தாரும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், உடன்குடி, கோவில்பட்டி, இட்டமொழி, கயத்தாறு உள்ளிட்ட நகரத்தாரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் போன்ற ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஆடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் வந்து செல்கின்றனர்.

இதனால் இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. காலை 5 மணியிலிருந்து துவங்கும் பரபரப்பு பிற்பகல் வரை நீடிக்கிறது. இதனால் அங்கு சாணம் உள்ளிட்ட கால்நடை கழிவுகள் சந்தை முழுவதும் சங்கமிக்கின்றன. இதனை சுத்தம் செய்யாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெறும் காய்கறி சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். சில்லரை வியாபாரிகள் மட்டுமின்றி ஏராளமான பொதுமக்கள் குறிப்பாக பெண்களும் வந்து தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

சந்தையில் வியாபாரம் முடிகின்ற நிலையில் தேவையற்ற சொத்தை காய்கறிகள் மற்றும் கழிவுகளை வியாபாரிகள் ஆங்காங்கே கொட்டிச் செல்வதால் அது அழுகி துர்நாற்றம் அடிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்வோர் மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்லும் நிலை உள்ளது.
அதிலும் மழைக்காலங்களில் சந்தையின் நிலை பரிதாபம்தான். ஏற்கெனவே கழிவுகளால் கசங்கும் சந்தை கழிவுநீரிலும் தத்தளிக்கும் நிலை உள்ளது. இதன்மூலம் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு வைரஸ் நோய்கள் பரவுகின்றன. பிரபலமான வள்ளியூர் சந்தையில் கால்நடை மற்றும் காய்கறி கழிவுகள் ஏற்படுத்தும் சுகாதார கேடால் அப்பகுதியில் வசிப்போரும் அவ்வழியாக செல்வோரும் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதை.

இதுபோல் சந்தையில் வியாபாரிகளுக்காக கட்டப்பட்டுள்ள கடைகளில் 40 சதவீத கடைகள் இடிந்து கிடக்கின்றன. எனவே வியாபாரிகள் பயன்படுத்தப்பட வேண்டிய அந்த கடைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் விபசாரம், குடி உள்ளிட்ட செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. சிலர் அதனை கழிவறையாக பயன்படுத்தியும் செல்கின்றனர். எனவே சந்தையை பராமரித்து தக்க வழியில் பாதுகாக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பம்.

பெண்கள் கழிப்பிடம் வேண்டும்

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையம், சங்கரன்கோவில், முக்கூடல் போன்று பிரசித்தி பெற்ற வள்ளியூர் சந்தைக்கு ஆயிரக்
கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் சந்தையில் குறிப்பிடும்படியான வசதிகள் இல்லை. குறிப்பாக அவசரத்திற்கு கழிவறை வசதி இல்லை. சிறுநீர் கழிப்பதற்குகூட தகுந்த இடம் இல்லை. இதனால் காய்கறி சந்தைக்கு வரும் ஏராளமான பெண்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அவர்களின் நலன் கருதியாவது இலவச கழிப்பிடம் அல்லது கட்டண கழிப்பிடமாவது கட்டவேண்டும். மேலும் சீரழிந்து வரும் சந்தையை சீரமைக்கவேண்டும் என்றும் சமாஜ்வாடி கட்சி மாநில இளைஞரணி தலைவர் நெல்லை செந்தில் மலரவன் தெரிவித்தார்.

நன்றி : தினகரன்

About Eesu

Check Also

வைகுண்டராஜன் 800 கோடி வரி ஏய்ப்பா..?

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுனவத்தில் இருந்து, கணக்கில் காட்டாத 8 கோடி ரூபாயை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். தொழிலதிபர் …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன