‘தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர் கருணாநிதி‘ என்று நெல்லை பிரசார கூட்டத்தில் ஜெயலலிதா ஆவேசமாக பேசினார்.
ஜெயலலிதா பிரசாரம்
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் சென்னையில் 16 தொகுதிகளில் அவர் வேன் மூலம் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
நேற்று பாளையங்கோட்டையில் நடைபெற்ற பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்று பேசினார். இதற்காக பாளையங்கோட்டை பெல் பள்ளிக்கூட மைதானத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது.
உற்சாக வரவேற்பு
தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு வந்த ஜெயலலிதா பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளிக்கூட மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிபேடில் வந்து இறங்கினார். அங்கிருந்து காரில் ஏறி பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்துக்கு மாலை 4.05 மணிக்கு வந்தார். வழிநெடுகிலும் தொண்டர்களும், பொதுமக்களும் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். செண்டை மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும் வரவேற்றனர். பெண்கள் முளைப்பாரி, பூரண கும்பங்களுடன் வரவேற்பு அளித்தனர்.
20 தொகுதி வேட்பாளர்கள்
பொதுக்கூட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நெல்லை, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம், கன்னியாகுமரி, நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய 20 சட்டசபை தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆதரவு தாருங்கள்
இந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தின் வாயிலாக, 16.5.2016 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று உங்களை சந்தித்து கேட்டுக்கொள்ளவே இங்கே வந்திருக்கிறேன்.
வரும் 16.5.2016 அன்று, அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களை கேட்டுக் கெள்ளவே இங்கே வந்துள்ளேன்.
நல்லாட்சி தொடர...
தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும். தமிழ் நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி அமையப் பெற வேண்டும். ஏழை, எளியோர் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று தமிழக மக்களாகிய நீங்கள், 2011-ம் ஆண்டு எனது தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு அமோக ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தீர்கள். இந்த நல்லாட்சி தொடர, இந்த சட்டமன்ற தேர்தலிலும், அ.தி.மு.க. மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அல்லும் பகலும்…
2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, அனைத்து பிரிவினர் நலனுக்காகவும், விவசாயம், ஜவுளித்தொழில், சேவைத் துறை என அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னேற்றம் அடைய 54 தலைப்புகளில் அ.தி.மு.க. வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் நிறைவேற்றுள்ள வாக்குறுதிகளை இப்போது அளித்துள்ளோம்.
நான் அல்லும், பகலும் தமிழக மக்களின் நலன் கருதியே உழைத்து வருகிறேன். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி தன் மக்களுக்காகவே உழைப்பவர். நான் தமிழக மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறேன். ஆனால் கருணாநிதி, தன் மக்களுக்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்தினார். அரசின் வருவாயைப் பெருக்க நான் நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். கருணாநிதி தன் மக்களின் வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளையே எடுத்தார். தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட நான் குரல் கொடுத்து வருகிறேன். தன் மக்கள் வளமான இலாகாக்களை மத்திய அமைச்சரவையில் பெற குரல் கொடுத்தவர் கருணாநிதி.
தமிழர்களின் நலனை அடகு வைத்தவர்
எனது நடவடிக்கைகள் அனைத்தும் தமிழர் நலனுக்காகத்தான். ஆனால் தன் மக்களின் நலனுக்காக தமிழர்களின் நலனை அடகு வைத்தவர், கருணாநிதி. என் வாழ்வே தமிழக மக்களுக்காகத்தான் என நான் வாழ்ந்து வருகிறேன். தன் வாழ்வே தன் மக்களுக்காக என வாழ்பவர் கருணாநிதி.
தமிழர் வளம் பெற, தமிழ் நாட்டின் நலன் காக்க, தமிழகம் வளர்ச்சி பெற, அ.தி.மு.க.வை நீங்கள் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
இனப்படுகொலைக்கு
இலங்கை தமிழர்களின் இனப்படுகொலைக்குக் காரணம் தி.முக., அந்த இனப்படுகொலையை செய்தவர்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தத் தூண்டியது அ.திமு.க.
கச்சத்தீவு தாரை வார்க்கப்பட உடந்தையாய் இருந்தது தி.மு.க., கச்சத்தீவை மீட்க பாடுபடுவது அ.தி.மு.க.
மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்து, அவர்களை பேராசைக்காரர்கள் என பழித்தது தி.மு.க.; சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட பாடுபடுவது அ.தி.மு.க.
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணைகளை கட்ட உறுதுணையாக இருந்தது தி.மு.க.; அணைகள் கட்டும் முயற்சியை முறியடிப்பது அ.தி.மு.க.
காவிரி நதிநீர்ப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்றது தி.மு.க.; நடுவர் மன்ற ஆணையை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்காடுவது அ.திமு.க.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரளாவுக்கு சாதகமாக நடக்க முற்பட்டது தி.மு.க.; திறமையான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறி வெற்றி பெற்றது அ.திமு.க.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் கர்நாடகத்தை ஆதரித்தது தி.மு.க.; இந்தத் திட்டத்தை நிறைவேற்றியது அ.தி.மு.க.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மூலம் அதை வெளியிடச் செய்தது அ.தி.மு.க.
இருண்ட தமிழகத்தை…
தமிழகத்தை இருளில் மூழ்கச் செய்தது தி.மு.க.; இருண்ட தமிழகத்தை ஒளிமயமாக்கியது அ.தி.மு.க.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு அளித்தது தி.மு.க.; சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுத்தது அ.தி.மு.க.
மீத்தேன் எரிவாயு திட்டம் மூலம் டெல்டாவை பாலைவனமாக்க தி.மு.க. துடித்தது; மீத்தேன் திட்ட நிறுவனத்தை தமிழ்நாட்டை விட்டே விரட்டியது அ.தி.மு.க.
தொழிற்சாலைகளுக்கு மூடு விழா நடத்தியது தி.மு.க.; புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தியது அ.தி.மு.க.
மக்களின் நிலங்களை அபகரித்தது தி.மு.க.; அபகரிப்பாளர்களிடம் இருந்து நிலங்களை மீட்டது அ.திமு.க.
திரைப்படத் துறையை கபளீகரம் செய்தது தி.மு.க.; திரைப்படத் துறையை மீட்டது அ.தி.மு.க.
தனியார் வளம் பெற திட்டங்கள் தீட்டியது தி.மு.க.; அரசு நிறுவனங்கள் மூலம் திட்டங்களை செயல்படுத்தியது அ.தி.மு.க.
இலவசம் வழங்கி குடும்ப நலன் பேணியது தி.மு.க.; விலையில்லாமல் பொருட்கள் வழங்கி மக்கள் நலன் பேணியது அ.தி.மு.க.
2ஜி ஸ்பெக்ட்ரம்
2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளை அடித்தது தி.மு.க.; கொள்ளைகளை வெளிப்படுத்தி குரல் கொடுத்தது அ.தி.மு.க.
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என ஊழல் ஆட்சி நடத்தியது தி.மு.க.; ஊழல் இல்லாத ஆட்சியை வழங்குவது அ.தி.மு.க.
மணல், தாதுமணல், கிரானைட் கொள்ளையர்களுக்கு பாதுகாப்பாக இருந்தது தி.மு.க.; கொள்ளையர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை, சட்டத்தை எதிர்கொள்ள வைத்தது அ.தி.மு.க.
தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆக்கியது தி.மு.க.; யாரும் தடியே எடுக்காமல் சட்டம் ஒழுங்கை பேணுவது அ.தி.மு.க.
காங்கிரசுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருந்தது தி.மு.க.; விலை உயர்வை மக்கள் தலையில் திணிக்காமல் போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியம் வழங்கியது அ.தி.மு.க.
காங்கிரசுடன் இணைந்து எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியது தி.மு.க.; எரிவாயு சிலிண்டருக்கு மதிப்புக் கூட்டு வரியை ரத்து செய்தது அ.தி.மு.க.
கண்ணீரில் தவிக்க விட்டன
காங்கிரசுடன் இணைந்து உர விலை உயர்த்தியது தி.மு.க.; உரத்திற்கான வரியை நீக்கியது அ.தி.மு.க.
காங்கிரசுடன் இணைந்து விலைவாசி உயர்வுக்கு வழி வகுத்தது தி.மு.க.; விலை உயர்வில் இருந்து ஏழை எளியோரைக் காத்தது அ.தி.மு.க.
மொத்தத்தில் தி.மு.க.வும், காங்கிரசும் கூட்டணி அமைத்து உங்களை கண்ணீரில் தவிக்க விட்டன. அதை மாற்றி உங்களை கை தூக்கி விட்டு, உங்களது கண்ணீரை துடைத்து, உங்களது முகங்களில் மலர்ச்சியை ஏற்படுத்தியது அ.தி.மு.க.
எனவே, வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அந்த வெற்றி உங்களது வெற்றி. உங்களது நலன் காக்கும் வெற்றி. உங்கள் வாழ்வில் வசந்தம் தொடர்ந்திடும் வெற்றி. உங்கள் ஏற்றத்தை தொடரச் செய்யும் வெற்றி. மக்களின் எதிரிகளை அழிக்கும் வெற்றி.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
கூட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.முத்துக்கருப்பன், சசிகலாபுஷ்பா, கே.ஆர்.பி.பிரபாகரன், வசந்திமுருகேசன், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, விஜிலா சத்யானந்த், முன்னாள் அமைச்சர் நாகூர்மீரான், முன்னாள் மத்திய மந்திரி கடம்பூர் ஜனார்த்தனன், முன்னாள் எம்.பி. முருகேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் மைக்கேல்ராயப்பன், முத்துசெல்வி, நெல்லை மாநகராட்சி மேயர் புவனேசுவரி, துணைமேயர் ஜெகநாதன் என்ற கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்..பி.ஆதித்தன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், யூனியன் தலைவர்கள் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், கல்லூர் வேலாயுதம், நெல்லை மாநகர் மாவட்ட பொருளாளர் தச்சை கணேசராஜா, பேரவை செயலாளர் சுதாபரமசிவன், மாணவர் அணி செயலாளர் ஜெரால்டு, பாசறை செயலாளர் அரிகரசிவசங்கர், இலக்கிய அணி தலைவர் பழனிவேல்பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் பரமசிவஅய்யப்பன், தொகுதி செயலாளர் பால்துரை, திசையன்விளை நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன், சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினத்தந்தி