Breaking News

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும்.

நெல்லை,

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை தெரிவித்தார்.

நதி நீர் இணைப்பு திட்டம்
மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை வறண்ட பகுதிகளான ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தாலுகாக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு நதி நீர் இணைப்பு திட்டம் கடந்த 2008–ம் ஆண்டு ரூ.369 கோடி செலவில் தொடங்கப்பட்டது. அதன்படி நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா வெள்ளாங்குழி தாமிரபரணி ஆற்றின் கன்னடியன் கால்வாயில் இருந்து சேரன்மாதேவி, மூலக்கரைப்பட்டி, காரியாண்டி வழியாக திசையன்விளை எம்.எல்.தேரி வரையிலும் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதில் வெள்ளாங்குழியில் இருந்து சேரன்மாதேவி வரையிலும் முதல் கட்டமாகவும், சேரன்மாதேவியில் இருந்து மூலக்கரைப்பட்டி வரையிலும் 2–வது கட்டமாகவும் தலா 30 கிலோ மீட்டர் வீதம் கால்வாய் தோண்டப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இனி 3–வது கட்டமாக மூலக்கரைப்பட்டியில் இருந்து காரியாண்டி வரையிலும், 4–வது கட்டமாக காரியாண்டியில் இருந்து திசையன்விளை எம்.எல்.தேரி வரையிலும் கால்வாய் தோண்டும் பணி நடைபெற உள்ளது.

அரசு உறுதிமொழி குழு ஆய்வு
இந்த நிலையில் தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினர். அந்த குழுவின் தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை (ராதாபுரம்), குழு உறுப்பினர்கள் ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), மனோரஞ்சிதம் (ஊத்தங்கரை), மனோகரன் (வாசுதேவநல்லூர்), குழு இணை செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் சுஜாதா தேவி ஆகியோர் கொண்ட குழுவினர், தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டத்தில் நெல்லை அருகே பொன்னாக்குடி நாற்கர சாலை அருகில் தோண்டப்பட்ட கால்வாயை பார்வையிட்டனர்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நதி நீர் இணைப்பு திட்ட செயற்பொறியாளர் ஞானேசுவரன், நதிகள் இணைக்கப்படுவது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.

பின்னர் சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் ஐ.எஸ்.இன்பத்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அமைச்சகங்களில்…
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்கள் அளிக்கும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதா?, அரசு செயல்படுத்தும் பணிகள் எந்த நிலையில் உள்ளது? என்பதை சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழுவானது, மாநிலம் முழுவதும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். அதன்படி நெல்லை மாவட்டத்தில் ஆய்வு நடத்தி உள்ளோம். தற்போது தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்தோம்.

இந்த திட்டமானது கடந்த 2003–ம் ஆண்டு சாத்தான்குளத்தில் நடந்த இடைத்தேர்தலின்போது, அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான ஆய்வு பணிகளும் நடைபெற்றது. பின்னர் கடந்த 2008–ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகங்களிடம் முறையான அனுமதி பெறவில்லை. இதனால் இந்த திட்டத்தை முறையாக நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் போடப்பட்டது.

அதிகமான இழப்பீடு
கடந்த 2013–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசிடம் அனுமதியை பெற்றார். அதன் பிறகு ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது.

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நதிகள் இணைப்பு திட்டத்துக்கு நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது. அதன்படி இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 4 மடங்கு அதிகமாக இழப்பீட்டுத்தொகை வழங்கப்படும். மேலும் ஒரு திட்டத்துக்கு தேவையான நிலத்தை முழுமையாக கையகப்படுத்திய பின்னர்தான், அந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

ரூ.872½ கோடி செலவில்…
தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு நதிகள் இணைப்பு திட்டத்தின் 3–வது கட்ட பணிகளுக்கு வருகிற 20–ந்தேதி டெண்டர் விடப்படுகிறது. 3–வது கட்ட பணிகள் ரூ.217 கோடி செலவில் நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு தேவையான நிலத்தை கையகப்படுத்திய பின்னர் வருகிற டிசம்பர் மாதத்தில் 3–வது கட்ட பணிகள் தொடங்கப்படும்.

அந்த பணிகள் நிறைவேற்றப்படும்போதே, அடுத்த ஆண்டு (2019) ஜூன் மாதம் 4–வது கட்ட பணிகள் தொடங்கப்படும். அனைத்து பணிகளும் வருகிற 2020–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் நிறைவு பெறும். திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ.872½ கோடி செலவில் தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினத்தந்தி 

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன