நெல்லை: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை செய்திருந்தாலும் அதே மாவட்டத்தின் இன்னொரு பகுதிகள் குடிக்க தண்ணீருக்கும் வழியின்றி தவிக்கும் வறட்சி நிலையை நோக்கி போய்க்கொண்டு உள்ளன. அரசியல் ரீதியான ஆர்வம் (Political will) இல்லாததும், அதிகாரிகளின் முறையான திட்டமிடல் இல்லாததும், 3 தாலுகா மக்களை ஏமாற்றிவிட்டது.
தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3வது) அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டு, அன்றைய முதல்வர் கருணாநிதியால் 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன. இழு இழு என இழுக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிந்து, நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்துக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்துக்கும், ஆக மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்துக்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் பாசன உறுதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும். ஆனால் பயன்பெறவில்லை என்பதுதான் இங்கு சோகம்.
சுறுக்கமாக சொன்னால்.. வற்றாத ஜீவநதி தாமிரபரணி ஓடும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில், உள்ள திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய தாலுகா பகுதிகளில் குடிக்க கூட தண்ணீர் இல்லாத அவல நிலை உள்ளது. மணிமுத்தாறு, பாபநாசம் ஆகிய இந்த இரண்டு அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை முறையாக திறந்துவிட்டு, அது பல பகுதிகளுக்கு வேளாண்மை மற்றும் குடிநீருக்கான ஆதாரமாக மாறி இறுதியாக திசையன்விளை, சாத்தான்குளம், ராதாபுரம் தாலுகா பகுதிகளிலுள்ள குளங்களை நிரப்பி, உப்பு நீரை மட்டுமே நிலத்திற்கு அடியில் பார்த்துவரும் அந்த பரிதாப மக்களுக்கு, வேளாண்மை பயன்பாட்டுக்கும் குடிநீர் பயன்பாட்டுக்கும் இது பயன்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இந்த மக்களின் நிலையை அறிந்துதான், இங்குள்ள குளங்களை நிரப்பி இறுதியாக எம்எல் தேரி என்கிற பகுதிக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய குளங்களை நிரப்பி நிலத்தடி நீர் ஆதாரத்தை பெருக்கி நீர் மேலாண்மையில் ஒரு புரட்சியை செய்ய வேண்டும் என்று கருணாநிதி நினைத்தார். எனவேதான், இதை கருணாநிதியின் “கனவுத் திட்டம்” என்று சொல்கிறார்கள்.
ஒருவழியாக, 2009ம் ஆண்டு 100 கோடியில் ஆரம்பித்த கருமேனி-நம்பியாறு திட்டம் இடையே இருமுறை அதிமுக ஆட்சியை பார்த்து, இப்போது திமுக ஆட்சி காலத்தில்தான் முடிந்துள்ளது. இப்போது திட்டமதிப்பு 900 கோடிக்கும் மேலாகிவிட்டது. குடிநீரும் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கான திட்டத்தை கூட வேகமாக செயல்படுத்த முடியாமல்தான் நமது அரசியல் சிஸ்டம் இருந்தது கொடுமையிலும் கொடுமை. ஒரு வழியாக இப்போதாவது இதை செய்தார்களே என்று நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில், இதிலும் ஒரு குளறுபடி நடந்துள்ளது.
தற்போது பெய்த பெருமழையின்போது மணிமுத்தாறு அணையில் 80லிருந்து 100 அடிக்கு உள்ள தண்ணீர் இருக்கும்போதே முறையாக தண்ணீரை திறந்து விட்டிருந்தால், அது கருமேனி, நம்பியாறு திட்ட கால்வாய் மூலமாக திசையன்விளை, ராதாபுரம் பகுதிகளுக்கு வந்து சேர்ந்திருக்கும். ஆனால் அதிகாரிகள் அதை முறையாக திட்டமிடவில்லை. அணையில், 100 அடிக்கு மேல் தண்ணீர் சென்றபிறகுதான், இதனால் வேறு எங்கேனும் வெள்ளைப் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால், அவசர அவசரமாக ஆற்றுக்குள் அந்த நீரை திறந்து விட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
முதல்வரால் சமீபத்தில் திறந்து வைத்த இந்த வெள்ள நீர் கால்வாயில் தண்ணீரை திறந்து விடவில்லையாம். 80 அடி கால்வாய் எனப்படும் உபரி நீரை வெளியேற்றும் கால்வாயிலும் திறந்துவிடவில்லை. வெள்ளநீர் கால்வாய் மூலமாக இந்த கால்வாய்க்கு வரவில்லை தண்ணீர். மழை நீரால்தான் வந்து தேங்கி நிற்கிறது. இதுவும் இன்னும் ஒரு வாரத்தில் வற்றிவிடும். பிறகு எப்படி நிலத்தடி நீர் நல்ல தண்ணீராக மாறும்..
இத்தனைக்கும் எவ்வளவு நீரை விட்டாலும் தாங்கிபிடித்து பிற பகுதிகளுக்கு இயற்கையாகவே சப்ளை செய்யும் ஆயன்குளம் அதிசய கிணறு திசையன்விளை தாலுகாவில்தான் உள்ளது. அப்படி ஒரு இயற்கை ஏற்பாடு கிடைத்தும், தண்ணீரை சரியாக திறந்துவிடாத இந்த நிலைமையை என்னவென்று அழைப்பது? உப்பு நீர்தான் இந்த வருடமும் இந்த மக்களுக்கு கிடைத்த கதியா? ஒரு பக்கம் தாமிரபரணி தாரை தாரையாக கடலில் கலக்கிறது. அதே மாவட்டத்தில் மக்கள் குடிநீருக்கும் வழியின்றி தவிக்கிறார்கள். இதுதான் நீர் மேலாண்மை திறமையா? மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள்? என்று அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.