செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / பதிவுகள் / தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் 3-ஆம் கட்டப் பணி தொடக்கம்: ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆய்வு

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் 3-ஆம் கட்டப் பணி தொடக்கம்: ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆய்வு

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாயின் 3-ஆம் கட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.
தாமிரவருணி ஆற்றுடன் கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளநீர் கால்வாயில் முதல் 2 கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன.
3-ஆம் கட்டப் பணிகள் நான்குனேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள பெருமாள் நகர் பகுதியில் தொடங்க உள்ளது. இந்த இடத்தை மாவட்ட ஆட்சியர், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது: தாமிரவருணி ஆற்றுடன் கருமேனியாறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைத்து தாமிரவருணி ஆற்றின் உபரி நீரை கன்னடியன் கால்வாயிலிருந்து வெள்ளநீர் கால்வாய் மூலம் நான்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட 5 தாலுகா மக்கள் பயனடையும் வகையிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் வட்டத்தில் 52 கிராமங்கள் 23 ஆயிரத்து 40 ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன் அடையும் வகையிலும் வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த கால்வாய் மொத்தம் 72 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படுகிறது. 4 கட்டங்களாக இந்த கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. மணிமுத்தாறுபகுதியில் இருந்து முதல் மற்றும் 2-ஆம் கட்ட பணிகள் 39 கி.மீ. தொலைவு மொத்தம் ரூ. 213 கோடியில் முடிவடைந்துள்ளது. 3-ஆம் கட்டப்பணிகள் நான்குனேரி வட்டம் அ.சாத்தான்குளம், ராமகிருஷ்ணாபுரம், மூலக்கரைப்பட்டி, சிந்தாமணி, முனைஞ்சிப்பட்டி, காடன்குளம், திருமலாபுரம், விஜயநாராயணம், இலங்குளம் ஆகிய கிராமங்கள் வழியாக 13 கி.மீ. தொலைவு நடைபெற உள்ளது. இதற்கான நிலஅளவை பணிகள் முடிவடைந்துள்ளன.
புதிய நில எடுப்பு சட்டத்தின் படி தனிநபர் பேச்சுவார்த்தையின் படி நிலஎடுப்புபணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய நிலஎடுப்பு சட்டத்தின் படி விவசாயிகளுக்கு நிலம் எடுப்புக்கான பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 3-ஆம் கட்ட பணிக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகள் 18 மாதகாலத்தில் முடிக்கப்பட்டுவிடும். பின்னர் 4-ஆம் கட்டபணிகள் 23 கி.மீ. தொலைவு நடைபெற உள்ளது. இதற்கான நிலஎடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவும் விரைவாக நடந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.
இது குறித்து ஐ.எஸ்.இன்பதுரை எம்எல்ஏ கூறியது: தாமிரவருணி நதியின் உபரி வெள்ளநீரை வறண்ட பகுதியான ராதாபுரம்தொகுதிக்குகொண்டுசெல்ல மறைந்த முதல்வர்ஜெயலலிதா திட்டம்உருவாக்கி அதனைதொடங்கிவைத்தார். இந்த திட்டம் மூலம் எனது தொகுதியைச் சேர்ந்த திசையன்விளை, எம்.எல்.தேரி பகுதிக்கு கொண்டு செல்ல உபரிநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது
3-ஆம் கட்டப்பணி தொடங்கப்பட உள்ளது என்றார் அவர்.
ஆய்வின் போது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் ஞானசேகரன், உதவி செயற்பொறியாளர்கள் நாகராஜ், ஜெயசுதா, கணபதி ரமேஷ், உதவி பொறியாளர் செல்வி, நந்தினி, விசாலாட்சி, அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் வள்ளியூர் இ.அழகானந்தம், ராதாபுரம் அந்தோமி அமலராஜா, வள்ளியூர் எட்வர்ட்சிங், ராதாபுரம் முருகேசன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி:  தினமணி

About Eesu

Check Also

நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திசையன்விளை அருகே …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன