கணவனுடன் பைக்கில் பயணம் செய்த பெண், கவனக் குறைவாக இருந்ததால் அவரது சேலை பைக் சக்கரத்தில் சுற்றி விபத்து ஏற்பட்டது. இதில் 6 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மேல பண்டாரகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சரவணன். இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். சரவணன், தனது மனைவி முத்துலட்சுமி மற்றும் 6 மாத கைக்குழந்தையான மோனிஷா ஆகியோருடன் பைக்கில் வள்ளியூரில் உள்ள கோயிலுக்குச் சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் பைக்கில் ஊருக்குத் திரும்பிக் கொண்டு இருந்தார்.
கோட்டைக்கருங்குளம் என்ற கிராமத்தின் அருகே வந்துகொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமர்ந்து இருந்த முத்துலட்சுமியின் சேலை பின்சக்கரத்தில் சுற்றியது. எதிர்பாராதவிதமாக நடந்த இந்தச் சம்பவத்தால் அவர் நிலைகுலைந்தார். அதனால் ஏற்பட்ட சிக்கலில் பைக் கீழே சரிந்து மூவரும் விழுந்தனர். இந்தச் சம்பவத்தில், முத்துலட்சுமியின் கையில் இருந்த குழந்தை தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் மூவருக்கும் காயம் ஏற்பட்டது.
குழந்தை மோனிஷாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் முதலுதவிக்குப் பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை மோனிஷா பரிதாபமாக உயிரிழந்தால் சரவணனின் உறவினர்கள் மட்டும் அல்லாமல் பண்டாரகுளம் கிராமத்தினர் அனைவரும் பெரும் சோகத்துக்கு உள்ளாகினர்.
இந்தச் சம்பவம் பற்றி பேசிய காவல்துறையினர், ’’இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவர்களின் சேலை, துப்பட்டா உள்ளிட்ட துணிகள் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி விடாதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில், துணிகள் சக்கரத்துக்குள் சென்று விடாமல் பாதுகாக்கும் கம்பி வலை போன்ற அமைப்பை பொறுத்த வேண்டும். கவனமாகவும் மெதுவாகவும் பயணம் செய்தால் பாதுகாப்பான பயணமாக அமையும்’’ என்றார்கள்.
நன்றி : விகடன்