திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
கோவில் கொடை விழா
நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று காலையில் தொடங்கியது. இந்த கொடைவிழா வருகிற 26–ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.
கோலப்போட்டி
கொடை விழாவையொட்டி நேற்று மாலையில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, வித விதமான வண்ண கோலங்களை வரைந்தனர்.
இந்த போட்டியில் சிவபெருமான்–பார்வதி தேவி உருவத்துடன் வரையப்பட்ட கோலத்துக்கு சாரதி என்ற பெண் முதல் பரிசு பெற்றார். மீனா என்பவர் 2–ம் பரிசும், சாந்தி கண்ணன் 3–வது பரிசும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பள்ளிக்கூட மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள்
கொடைவிழா நாட்களில் மாணவ– மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி, சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை, சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, சமூக நாடகம், வில்லிசை, கரக ஆட்டம், மஞ்சள் பெட்டி ஊர்வலம், அலங்கார பூஜை, சுவாமி மஞ்சள் நீராடுதல், பரதநாட்டியம், அன்னதானம், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி குங்குமம் பாஸ்கர் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.
நன்றி : தினத்தந்தி