Breaking News

திசையன்விளை பஸ் நிலையத்தில் பயங்கரம்: பள்ளி தலைமை ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு முன்னாள் ராணுவ வீரர் கைது

திசையன்விளை பஸ் நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

தலைமை ஆசிரியை
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது கேசவன்குளம். இந்த ஊரைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருடைய மனைவி பார்வதி (வயது 37). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். பள்ளிக்கூடத்துக்கு தினமும் பஸ்சில் சென்று வருவது வழக்கம்.

நேற்று காலையில் கேசவன்குளத்தில் இருந்து திசையன்விளைக்கு பஸ்சில் சென்றார். திசையன்விளை பஸ் நிலையத்திற்குள் காலை 8–30 மணியளவில் பஸ் சென்று நின்றதும் அதில் இருந்து கீழே இறங்கினார்.

அரிவாள் வெட்டு
அப்போது அதே பஸ்சில் வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பார்வதியை சரமாரியாக வெட்டினாராம். இதில் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியது. இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். காலை நேரம் என்பதால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே பார்வதியை அரிவாளால் வெட்டியவர் அங்கு இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை பிடித்துக் கொண்டனர்.

இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த பார்வதிக்கு திசையன்விளையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

முன்னாள் ராணுவ வீரர் கைது
இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதியை அரிவாளால் வெட்டியவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கைதானவர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளத்தைச் சேர்ந்த வில்லன் (46) என்பது தெரியவந்தது. இவர், பார்வதியின் அக்காள் கணவர் ஆவார். இவர்களுக்கு இடையே நிலத்தை பாகப்பிரிவினை செய்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாக தலைமை ஆசிரியை பார்வதியை, வில்லன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றது தெரிய வந்தது. வில்லன் 8 மாதங்கள் ராணுவத்தில் பணிபுரிந்து உள்ளார்.

பஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியை வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி : தினத்தந்தி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு - வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்