தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் மீண்டும் மாயம்: ஆசிரியர்கள், மக்கள் கடும் அவதி
நாசரேத்: தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் அடிக்கடி மாயமாவதால் ஆசிரியர்கள், பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். தூத்துக்குடியில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு தடம் எண் 145 எஸ்.எப்.எஸ். அரசு பஸ் புறப்பட்டு புதுக்கோட்டை செபத்தையாபுரம், சாயர்புரம், ஏரல், நாசரேத், சாத்தான்குளம், இட்டமொழி, திசையன்விளை வழியாக உவரிக்கு சென்று வருகிறது. இதே போல் உவரியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, நாசரேத், குரும்பூர் வழியாக தூத்துக்குடிக்கு செல்கிறது. இந்த பஸ் மதியம் 1.15 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு இதே மார்க்கமாக உவரிக்கு செல்கிறது. பின்னர் உவரியில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு திசையன்விளை, இட்டமொழி, சாத்தான்குளம், நாசரேத், குரும்பூர், ஏரல் வழியாக தூத்துக்குடி செல்கிறது.
இந்த பஸ் நாசரேத் பஸ் நிலையத்தில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு உவரிக்கு செல்கிறது. அதேபோல் திசையன்விளையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு நாசரேத் வழியாக தூத்துக்குடிக்கு செல்கிறது. இந்த பஸ் சில நாட்கள் காலையிலும், மாலையிலும் அடிக்கடி மாயமாவதால் சாத்தான்குளம், திசையன்விளை, இட்டமொழி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த பஸ் மீண்டும் அடிக்கடி மாயமாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது தக்க நடவடிக்கை எடுத்து அடிக்கடி மாயமாகும் தூத்துக்குடி-உவரி அரசு பஸ்சை தினமும் இயக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.
நன்றி : தினகரன்