திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தாலும்கூட திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து இம்மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த காற்று வீசியது. காலை 8 மணி நிலவரப்படி பாளையங்கோட்டையில் 6 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., ஆலங்குளத்தில் 2.4 மி.மீ., கன்னடியன் அணைக்கட்டில் 5.8 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 3 மி.மீ., சேரன்மகாதேவியில் 5 மி.மீ., பாபநாசம் அணையில் 12 மி.மீ., பாபநாசம் கீழ் அணையில் 6 மி.மீ. மழை பதிவானது.
அணைகளில் நீர்இருப்பு: பாபநாசம் அணை நீர்மட்டம் 24.20 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் 60.30 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 36.29 அடியாக இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 85.88 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 17 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பிற அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.
குடிநீர்த் தட்டுப்பாடு: அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாத நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக மட்டும் பாபநாசம் அணையில் இருந்து விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
இது போதுமானதாக இல்லாததால் தாமிரவருணி ஆற்றிலுள்ள குடிநீர்த் திட்டங்களுக்கு தேவையான நீர்வரத்து கிடைக்காமல் இவ்விரு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
திசையன்விளை, ராதாபுரம், நான்குனேரி பகுதியில் கடந்த 2 வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நன்றி : தினமணி