எழும்பூரில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற வி.வி.மினரல்ஸ் குழும நிறுவனத்தின் பெரு வணிக அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார்.
முறைகேடான லாபத்தில் கிடைத்த பணத்தை பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், வி.வி. குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனை, சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், காரைக்கால், ஆந்திர மாநிலம் உள்பட 100 இடங்களில் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கீரைக்காரன்தட்டையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வி.வி. மினரல்ஸ் நிறுவனம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்ட கடற்கரைகளில் உள்ள தாதுமணலை எடுத்து, சுத்திகரிப்பு செய்து கார்னெட், ரூட்டைல், இலுமனைட், சிலிக்கான் போன்ற தாதுக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது.
இந்நிறுவனம், கடற்கரை மேலாண்மை விதிகளை மீறியும், அரசு நிர்ணயித்த அளவை மீறியும் தாதுமணலை அள்ளுவதாகப் புகார் எழுந்தது. அதேபோல கடற்கரையில் தாதுமணல் அள்ளப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து விசாரணை செய்த தமிழக அரசு, கடந்த 2013 செப்டம்பர் 17-ஆம் தேதி கடற்கரையில் இருந்து தாதுமணல் அள்ளுவதற்குத் தடை விதித்தது.
இதன் பின்னர் வி.வி. மினரல்ஸ் குழும நிறுவனங்கள், நூற்பாலை, பெயிண்ட் ஆலை, சர்க்கரை ஆலை, நட்சத்திர ஹோட்டல், கல்குவாரி போன்ற தொழில்களில் முதலீடு செய்தது. ஊடகத் துறையிலும் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் கால்பதித்தது.
வருமானவரித் துறைக்குப் புகார்கள்: இந்நிலையில் வி.வி. மினரல்ஸ் குழும நிறுவனங்கள், முறைகேடான முறையில் கிடைத்த லாபத்தின் மூலம் நூற்பாலை, பெயிண்ட் ஆலை, சர்க்கரை ஆலை, நட்சத்திர ஹோட்டல், கல்குவாரி போன்ற தொழில்களில் பெரும் அளவில் முதலீடு செய்வதாக வருமானவரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. அதேபோல தாதுமணல் ஏற்றுமதி மூலம் கிடைத்த பணத்தை, வெளிநாடுகளிலும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் புகார்கள் வந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில், வருமானவரித் துறை முதல் கட்ட விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில், அந்த நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்த வருமான வரித் துறையினர் முடிவு செய்தனர்.
100 இடங்களில் சோதனை: அதன்படி, வருமானவரித் துறையினர் வி.வி. மினரல்ஸ் குழும நிறுவனங்களிலும், அதன் சார்பு நிறுவனங்களாகக் கண்டறியப்பட்ட 3 நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை சோதனை செய்தனர். இச் சோதனை அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளர்கள் வீடுகள், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் வீடுகள் ஆகியவற்றில் நடைபெற்றன.
சென்னையில் 38 இடங்கள், திருநெல்வேலி மாவட்டத்தில் 24 இடங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 30 இடங்கள், கோயம்புத்தூரில் 2 இடங்கள், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள், அலுவலகங்கள் என மொத்தம் 100 இடங்களில் சோதனைநடைபெற்றதாக வருமானவரித் துறையினர் தெரிவித்தனர்.
சென்னை: சென்னையில் எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் பெரு வணிக அலுவலகம், அதன் அருகே உள்ள மற்றொரு அலுவலகம், பெசன்ட் நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள அலுவலகம், நுங்கம்பாக்கத்தில் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி நிறுவன அலுவலகம், அசோக் நகரில் உள்ள அறக்கட்டளை அலுவலகம், அண்ணா சாலையில் உள்ள அலுவலகம் உள்பட 38 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைக்காக வியாழக்கிழமை காலை 6 மணியளவில், வாடகைக் கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள், வி.வி.மினரல்ஸ் குழும நிறுவனங்களின் அலுவலகத்துக்கு வந்தனர். சோதனை தொடங்கியதும், அலுவலகத்தில் இருந்து யாரையும் வெளியே செல்ல வருமான வரித் துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. சோதனை நடைபெற்ற முக்கியமான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இச்சோதனை பெரும்பாலான இடங்களில் இரவு 8 மணியைக் கடந்து நீடித்தது. சோதனையில் முறைகேடான முதலீடு குறித்தும், வருமான வரி ஏய்ப்பு குறித்தும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை நிறைவு பெற்ற பின்னரே, முழுமையான தகவல்களைத் தெரிவிக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.
தூத்துக்குடியில் வியாழக்கிழமை வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்ட விவி டைட்டானியம் நிறுவனம்.
நன்றி : தினமணி