Breaking News

புதிதாக மேம்பாலங்கள்-துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

மேம்பாலங்கள் மற்றும் ஆற்றுப் பாலம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்த முதல்வர்

தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 சாலை மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் காரமடையில் ரயில்வே கடவுக்குப் பதிலாகவும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரயில்வே கடவுக்குப் பதிலாகவும், திண்டுக்கல் நகரில் ரயில்வே கடவுக்கு மாற்றாகவும் சாலை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வாணியார் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
காவலர் குடியிருப்புகள்: தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகளையும் முதல்வர் பழனிசாமி திறந்தார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 26 காவலர் குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம் தேளூரில் 15 குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம் காடல்குடி-தட்டார் மடத்தில் 56 குடியிருப்புகள், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் 34 குடியிருப்புகள், தஞ்சாவூர் ரயில்வே காவலர்களுக்கான 43 குடியிருப்புகள் என மொத்தம் 148 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் குடியிருப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இத்துடன், சென்னை வேளச்சேரி, திருச்சி அரியமங்கலம் ஆகிய இடங்களில் கட்டப்பட்ட காவல் நிலையங்கள், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கட்டப்பட்ட 2 காவல் துறை கட்டடங்கள், கரூர் மாவட்டம் புகளூரில் 17 குடியிருப்புகள், புதுக்கோட்டை ஆலங்குடியில் 17 குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஆகிய இடங்களில் கட்டப்பட்ட தீயணைப்பு நிலையங்கள் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
துணை மின் நிலையங்கள்: தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் பழனிசாமி திறந்தார். தருமபுரி மாவட்டம் சோகத்தூர், தேனி மாவட்டம் தப்புக்குண்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, வேலூர் மாவட்டம் முசிறி, பச்சூர், திருவலம், கரூர் மாவட்டம் குப்புச்சிப்பாளையம், மதுரை டி.கிருஷ்ணாபுரம், பெரம்பலூர் நன்னை, அரியலூர் உடையார்பாளையம், விருதுநகர் அ.துலுக்கப்பட்டி, ஈரோடு வள்ளிபுரம், குறிச்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நன்றி  : தினமணி  

About Eesu

Check Also

நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திசையன்விளை அருகே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *