Breaking News

துண்டிக்கப்படும் திசையன்விளை, ராதாபுரம் தாலுகா! அரசிடமிருந்து குடிநீர், மருத்துவ உதவி அவசர தேவை

நெல்லை: வெறும் வார்த்தைக்காக சொல்லப்படுவது கிடையாது, உண்மையாகவே வரலாறு காணாத மழையை எதிர் கொண்டு இருக்கிறது திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள். 100 வயதான முதியவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை கூட, நாங்கள் பிறந்தது முதல் இதுவரை இப்படி ஒரு மழையை பார்த்தது கிடையாது என்பதுதான்.

புயலே வந்தாலும் பெரிய மழையை பார்த்திராத.. வெயில் மட்டுமே வாழ்க்கை என்று இருக்கக்கூடிய பகுதிகள் இவை. அதிலும் குறிப்பாக, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களும் தூத்துக்குடி மாவட்டத்தின், சாத்தான்குளம், திருச்செந்தூர் தாலுகாக்களும் மழை பெய்வதை வானியல் அற்புதம் போல வருடத்திற்கு எப்போதாவது ஒரு முறை சில நிமிடங்கள் மட்டுமே பார்த்திருக்கக் கூடிய பகுதிகள், இவ்வளவு பெரிய மழை வரும் என்று யாரும் எதிர்பார்க்காததால், உணவு தானியம், குடிநீர் போன்றவற்றை இருப்பு வைக்கவில்லை அந்த பகுதி மக்கள்.

இதன் பாதிப்பு இப்போது தெரிய ஆரம்பித்து இருக்கிறது. திருநெல்வேலி நகரத்தில் இருந்து நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் தாலுகா பகுதிகளுக்கு போக்குவரத்து தடைபட்டு இருப்பதால் அவசர காலத்திற்கான மருந்துகள், உணவு தானியங்கள், குடிநீர், பால் போன்றவற்றின் விநியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் எழுந்து இருக்கிறது. இன்று காலை கூட, திசையன்விளை தாலுகா, குட்டம் பகுதியில் பால் கிடைக்கவில்லை என்று பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதே நிலைதான், திருச்செந்தூர், சாத்தான்குளம், காயல்பட்டினம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும். அந்தப் பகுதிகளுக்கும் பிற பெரிய நகரங்களுக்குமான தொடர்பு பெரும்பாலும் துண்டிக்கப்பட்டுள்ளதால் போர்க்கால அடிப்படையில் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம், அவசர மருந்துகள் வினியோகம், உணவு தானிய தட்டுப்பாடு இல்லாத நிலைமை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது. கூடுதலாக பேரிடர் மீட்புப் படையினர் தெற்கு பகுதிகளுக்கு விரைந்து செல்ல வேண்டிய தேவை இருக்கிறது. இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமலும் தொலை தொடர்பு அவ்வப்போது துண்டிக்கப்படுவதாலும் அங்கே என்ன நடக்கிறது என்று பிற பகுதிகளுக்கு தெரியாமல் இருக்கிறது. அரசு இயந்திரம் முழுமையாக நெல்லை மாவட்டத்தின் தெற்கு தாலுகா பகுதிகளான கிராமங்களுக்கு முழுவீச்சில் களம் காண வேண்டிய அவசர தேவை எழுந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோர தாலுகா பகுதிகளிலும் இதே நிலைமை தான்.

நாம் குறிப்பிட்ட இந்த தாலுகா கிராமங்கள் அனைத்துமே பெரும்பாலும் முதியவர்களே வாழக்கூடிய பகுதியாக உள்ளது. இளைஞர்கள் வெளியூர்களில் தொழில் செய்தோ, வேலை பார்த்தோ வருகிறார்கள். எனவே, போதிய அளவுக்கு விவரம் அறியாத தலைமுறையினரே அதிகம் இருப்பதால் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள், என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்ய அரசு இயந்திரம் களமிறங்க வேண்டி இருக்கிறது. அவர்களுக்கு உணவு கையிருப்பு தொடர்பாகவும், குடிநீர் இருப்பு தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. இது அத்தனையும் வேகமாக செய்யப்பட வேண்டும் என்பது அரசுக்கு முன்பிருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.

நன்றி: ONE INDIA https://tamil.oneindia.com/weather/why-tamil-nadu-government-needs-to-help-southern-part-of-nellai-district-people-due-to-rain-566955.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Topic-Article

About Eesu

Check Also

நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *