Breaking News

சாத்தான்குளம் வங்கியில் கொள்ளை முயற்சி: கடன் வாங்கிய வங்கியிலேயே கைவரிசை காட்ட முயன்ற வாலிபர்கள்

ஜூலை 20, 2015

சாத்தான்குளம் வங்கியில் கொள்ளை முயற்சி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்–இட்டமொழி மெயின்ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை யொட்டி வங்கி மூடப்பட்டிருந்தது.

நேற்று அதிகாலை அங்கு வந்த 3 மர்மநபர்கள் வங்கியின் நுழைவு பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவுக்கு செல்லும் வயரை துண்டித்ததோடு, அங்கிருந்த அலாரம் கருவியை பிடுங்கி எறிந்தனர். பின்னர் வங்கியின் முன்புறம் உள்ள இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வங்கியின் பின்புறம் இருந்த அலாரம் கருவி பலத்த சத்தத்துடன் ஒலி எழுப்பியது.

இதையடுத்து பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் வருவதை அறிந்ததும் 3பேரும் அங்கிருந்து தப்பியோடினர். இருப்பினும் அவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் போலீசில் சிக்கினார். அவரை பொதுமக்கள் பிடித்து சாத்தான்குளம் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த ராமர் மகன் சிங்கராஜ் (வயது 24) என்பதும், வங்கியில் கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான சிங்கராஜ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:–

நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் உள்ள பழைய இரும்பு கடையில் வேலை செய்தேன். அங்கு வேலை செய்த, சாத்தான் குளம் அருகே உள்ள சொக்கலிங்க புரம் பரமசிவன் மகன் செந்தில்(24), சேலத்தை சேர்ந்த பண்டாரம் மகன் சங்கர்(27) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் வேலையில் இருந்து நின்று விட்டோம். பின்னர் சாத்தான்குளம் அருகே சங்கரன்குடியிருப்பில் உள்ள பழைய பிளாஸ்டிக் இரும்பு கடையில் வேலை செய்து வந்தோம்.

இதனிடையே எனது தங்கையின் திருமணத்துக்காக பலரிடம் கடன் வாங்கியிருந்தேன். ஆனால் அதனை என்னால் கொடுக்க முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கினர். மேலும் செந்திலுக்கு அவரது சொந்த ஊரான சொக்கலிங்கபுரத்தில் கோழிப்பண்ணை இருந்தது. அந்த பண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தீயில் எரிந்து நாசமானது.

இதனால் அவருக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக எங்களுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதற்காக நானும், செந்திலும், சங்கருடன் சேர்ந்து சாத்தான்குளத்தில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம். ஆனால் வங்கியில் அலாரம் ஒலித்ததால் போலீசில் சிக்கி விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவத்தில் தப்பியோடிய செந்தில், சங்கர் ஆகியோரை பிடிக்க சாத்தான்குளம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ரசலையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். தப்பியோடிய செந்தில் கோழிப்பண்ணை அமைப்பதற்காக கொள்ளையடிக்க முயன்ற சாத்தான்குளம் வங்கியில்தான் கடன் வாங்கியிருந்தார். கடன் வாங்கிய வங்கியிலேயே அவர் கொள்ளையடிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: மாலைமலர்

மேலும்: தினகரன், தினமணி, தினமலர்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply