Breaking News

தாது மணல்: கலால் வரி விலக்கு அளிக்க பரிசீலிக்கும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

vv

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு தாது மணலுக்கான கலால் வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கீரைக்காரன்தட்டுப் பகுதியில் செயல்பட்டு வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு, கலால் வரி ஆணையர் 2014 டிசம்பர் 24இல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2011 மார்ச் 1 முதல் 2014 மார்ச் 31 வரை மேற்படி நிறுவனம் எடுத்துள்ள தாது மணலுக்காக 76 கோடியே 67 லட்சத்து 96 ஆயிரத்து 735 ரூபாய் கலால் வரி செலுத்தும்படி ஏன் உத்தரவிடக்கூடாது என்று அதில் கூறப்பட்டிருந்தது. தாது மணலுக்கு கலால் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு உள்ளது. எனவே, இந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கும் முன்பு விலக்கு அளிப்பது சம்பந்தமாக முடிவு எடுக்க, கலால் வரி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், நோட்டீஸ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், வைகுண்டராஜன் கேட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் வழங்கவும், கலால் வரி செலுத்த விலக்கு உள்ளது தொடர்பாக பரிசீலிக்கவும் உத்தரவிட்டது. தனிநீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, திருநெல்வேலி கலால் வரி ஆணையர் மேல்முறையீடு செய்திருந்தார்.

வைகுண்டராஜனுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ் தொடர்பான ஆவணங்கள் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கோரியுள்ள அனைத்து ஆவணங்களையும் தர இயலாது. கலால் வரி செலுத்த விலக்கு அளிப்பது குறித்து இறுதி விசாரணையின்போது தான் முடிவு செய்யப்படும். ஆரம்பத்திலேயே அந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் வெ. ராமசுப்பிரமணியன், என். கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

நன்றி: தினமணி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply