சாத்தான்குளம் அருகே குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கியதால், பெரியதாழை – புத்தன்தருவை, திசையன்விளை செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையிலிருந்து செட்டிவிளை, அதிசய மணல் மாதா ஆலயம், புத்தன்தருவை வழியாக திசையன்விளை செல்லும் சாலை உள்ளது.
சடையனேரி கால்வாய் மற்றும் கருமேனி ஆற்று படுகை மூலம் புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் வந்து, தற்போது குளம் நிரம்பி வருகிறது.
குளத்துக்கரை வலுவில்லாமல் காணப்படுவதால் வெளியாகும் தண்ணீர் புத்தன்தருவை- மணல் மாதா கோயில் செல்லும் சாலையில் அதிகளவு தேங்கி, சாலையை கடந்து செல்கிறது. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வழியே செல்லும் வாகனங்கள் குட்டம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இப்பகுதியை அதிகாரிகள் பார்வையிட்டு சாலையை உயர்த்தி தண்ணீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தினமணி
