ஆசிரியை, நர்ஸ் உள்ளிட்ட 5 பேரை ஏமாற்றி திருமணம் செய்த காதல் மன்னன் புதுக்கோட்டையில் பிடிபட்டார். தலைமறைவான புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தபால், தந்தி காலனி 4வது தெருவைச்சேர்ந்த ரத்தினசாமி மகள் எஸ்தர்பாலா(38). ஆசிரியை பயிற்சி முடித்துள்ளார். இவரது கணவர் 2010ம் ஆண்டு இறந்துவிட்டதால் இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். உறவினர்கள் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் கடந்த 5 மாதத்திற்கு முன் உடன்குடி அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தைச்சேர்ந்த தெய்வநாயகம் மகன் வின்சென்ட் பாஸ்கர்(37) என்பவரை திருமணம் செய்தார். வரதட்சணையாக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்துள்ளனர். அதோடு மாப்பிள்ளைக்கு 5 பவுனில் மைனர் செயினும் போட்டுள்ளார்கள். கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடியில் குடித்தனம் நடத்தி வந்தனர். திருமணம் முடிந்து 17வது நாளில் வின்சென்ட் பாஸ்கர், தான் ஊழியம் செய்வதற்காக வெளியூர் செல்லவேண்டி உள்ளது. வருவதற்கு சிலநாட்கள் ஆகும் என்று கூறிச்சென்றுள்ளார்.
நாட்கள் ஓடி மதங்களாகின. அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் எஸ்தர் பாலா மற்றும் குடும்பத்தினர் தேடிப்பார்த்தனர். கணவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அது ஸ்விட்ச் ஆப் என வந்தது. ஆனாலும் ேதடுதல் வேட்டை தொடர்ந்தது. முதல் கணவர் இறந்து விட்டார். இரண்டாவது அமைந்த வாழ்க்கையும் இப்படி கேள்விக்குறியாகிவிட்டதே என எஸ்தர் பாலா கண் கலங்கினார். ஒரு வாரத்திற்கு முன் எஸ்தர் பாலா அவரது குடும்பத்தினர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தனர். அப்போது பஸ்நிலையத்தில் தனது கணவர் வின்சென்ட் பாஸ்கர் வேறு ஒரு பெண்ணுடன் நிற்பதை எஸ்தர்பாலா பார்த்துவிட்டார். அவரை பிடிப்பதற்காக குடும்பத்தினர் சென்றனர். ஆனால் அவர், இவர்கள் கண்ணில் படாமல் தப்பி சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் எஸ்தர் பாலா புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் வனிதா ராணி விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையில் வின்சென்ட் பாஸ்கர் நேற்றிரவு புதுக்கோட்டை பள்ளி அருகே நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கவே சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் வனிதா ராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரை மடக்கி பிடித்தனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விடிய விடிய விசாரணை நடந்தது. இதில் எஸ்தர் பாலா மட்டுமின்றி மேலும் 4 பெண்களை வின்சென்ட் பாஸ்கர் ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. அதுகுறித்த விவரம்: கைது செய்யப்பட்ட வின்சென்ட் பாஸ்கர் வடக்கன்குளத்தில் உள்ள கல்லூரியில் தகவல் தொடர்பாளராக வேலைபார்த்து வந்துள்ளார். திருமண வயது நெருங்கியதும் இவருக்கு பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். ஆனால் அதை தட்டிக்கழித்த அவர் தானாகவே பெண் பார்க்க தொடங்கி உள்ளார்.
இவருக்கு உதவியாக திசையன்விளை இட்டமொழி சுவிஷேசபுரத்தைச்சேர்ந்த திருமணபு ரோக்கர் ஜான் இன்பராஜ் இருந்துள்ளார். இவர் மூலம் சாயர்புரம் அருகில் உள்ள நடுவைக்குறிச்சியைச்சேர்ந்த ஜெயந்தி என்பவரை முதலில் திருமணம் செய்துள்ளார். அவருடன் குடும்பம் நடத்திவந்த நிலையில் களக்காடு அருகில் உள்ள டோனாவூரைச்சேர்ந்த பொற்செல்வி என்பவரை 2ம் திருமணம் செய்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் வாழ்ந்து வந்த வின்சென்ட் பாஸ்கருக்கு திருமண ஆசை அதோடு நின்று விடவில்லை. 3வதாக சாத்தான்குளம் பகுதியைச்சேர்ந்த சாந்தி என்பவரை திருமணம் செய்தார். ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு தெரியாமல் புதுக்கோட்டையைச்சேர்ந்த அனிதா என்பவரை 4 வது திருமணம் செய்தார். 4 பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்த நிலையில்தான் 5வதாக தூத்துக்குடி எஸ்தர் பாலாவை வசப்படுத்தி இருக்கிறார்.
வின்சென்ட் பாஸ்கர் திருமணம் செய்த 5 பெண்களும் கணவரை இழந்தவர்கள். இதில் எஸ்தர் பாலா, சாந்தி ஆகியோர் பி.எட் படித்துள்ளனர். அனிதா நர்ஸ் ஆவார். இரண்டாவது திருமணம் என்பதால் இவர்கள் வரதட்ணையாக ஏராளமான பணம் மற்றும் நகை போட்டுள்ளனர். ரொக்கமாக தந்த பணத்தில் பெரும் தொகையை வின்சென்ட் பாஸ்கர், புரோக்கர் ஜான் இன்பராஜிக்கு கொடுத்துள்ளார். அவர் உதவியுடன்தான் இத்தனை திருமணங்களும் நடந்துள்ளன. இது தவிர வேறு பெண்கள் யாருடனாவது திருமணம் செய்திருக்கிறாரா என தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நல்லவர் போல் நடித்து…
வின்சென்ட் பாஸ்கர் திருமணம் செய்த பெண்கள் விதவைகள் என்பதால் தங்கள் பிள்ைளகளுக்கு மறுமணம் நடந்தால் சரி என்ற மனநிலையில் அவர்களது பெற்றோர் சரியாக விசாரிக்காமல் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மேலும் அவர்களிடம் மிகவும் நல்லவர் போல் வின்சென்ட் பாஸ்கர் நடித்துள்ளார். மனைவிகளிடம் தான் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்ப்பதாகவும், செக்யூரிட்டியாக இருப்பதாகவும், ஊழியம் செய்து வருவதாகவும் ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு விதமாக கூறியிருக்கிறார். அதை அவர்கள் உண்மை என நம்பி விட்டனர்.
முதலில் திருமணம் செய்த 4 பெண்களிடம் பேசுவதற்காக 4 செல்போன்கள் பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று ஒருவருக்கும் தெரியாத நிலையில் 5வது திருமணம் செய்த எஸ்தர் பாலா மூலம்தான் இந்த குட்டு அம்பலத்திற்கு வந்துள்ளது. இவருக்கு உடந்தையாக இருந்த புரோக்கர் ஜான் இன்பராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.
நன்றி: தினகரன்
