திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத் துறையினர் சென்று பதிவாகியிருந்த விலங்கின் கால் தடத்தைப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

திசையன்விளையை அடுத்த இட்டமொழி அருகே உள்ள வாகைனேரியைச் சேர்ந்தவர் மலையாண்டி. மாடு மேய்க்கும் தொழிலாளி. இவரது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டதாம். அவர் வெளியே வந்தபோது, தொழுவத்தில் இருந்து சிறுத்தை போன்ற ஓர் விலங்கு சென்றதாம்.
பின்னர், அவர் மாடுகளை மேய்க்க காட்டுப் பகுதிக்குச் சென்றபோது அங்குள்ள குளக்கரையில் சிறுத்தையின் கால் தடங்கள் பதிந்திருந்ததைப் பார்த்துள்ளார்.
இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் வனச்சரக வனவர்கள் ரத்தினம், கஜேந்திரன் ஆகியோர் அங்கு சென்று, விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். அதை பதிவெடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே, அந்த விலங்கு சிறுத்தையா இல்லையா என்பது தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.
நன்றி: தினமணி