Breaking News

மனதை செம்மையாக்கும் மனோன்மணீஸ்வரர் : விஜயநாராயணம்

விஜயநாரயணம் மனோன்மணீஸ்வர் ஆலயம் பஞ்ச கயிலாயத்தில் கடைசி க்ஷேத்ரமாக போற்றப்படுகிறது. கயிலையில் பார்வதி தேவி உலக நலத்திற்காகச் சிவபெருமானைத் தியானித்தார். தனது கையில் வைத்திருந்த 1008 தாமரைப் புஷ்பங்களை பூமியில் தூவினாள். அந்த புஷ்பங்களைச் சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடங்களெல்லாம் 1008 சிவக்ஷேத்ரங்களாக போற்றப்படுகின்றன. இதில் 74வது க்ஷேத்ரமாக மனோன்மணி என்னும் லிங்கம் அமைந்த விஜயநாராயணம் போற்றப்படுகிறது. மனோன்மணி என்றால் மனதில் நினைத்ததை அருள்கின்றவர் என்று பொருள். காமதேனு, சிந்தாமணி, கற்பக விருட்சம் போல இங்கு மக்களுக்கு நினைத்ததை அருள்வதாலும் இவருக்கு மனோன்மணீஸ்வர் என்று பெயர் பெற்றார். இவருக்கு இணையாக பக்தர்களை காக்கும் பரமேஸ்வரி

manonmaneeswarar_vijayanarayanam_thisayanvilai.com

மனோன்மணீஸ்வரி என்று அழைக்கப்படுகிறார். இந்தக் கோ யிலின் விமானம் மனோன்மணி விமானமாகும். இக்கோயிலின் முன்புள்ள தீர்த்தம் மனோன்மணி தீர்த்தம் என்கிற சிவகங்கை தீர்த்தமாகும். இவ்வூருக்கு மனோன்மணீஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இதுபோன்று ஐந்து அமைப்புகள் உள்ள காரணத்தினால் இவ்வூர் பஞ்ச மனோன்மணீஸ்வரம் என்றழைக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பு இங்கு மட்டும்தான் உள்ளது என்கிறார்கள், ஊர் பெரியவர்கள். அர்ச்சுனனுக்கு மகாபாரதப் போரில் வெற்றி பெறுவோமா என்ற தயக்கம் ஏற்பட்டது. அப்போது வியாசரின் ஆலோசனைப்படி இங்குள்ள நாராயணனை தியானித்தான். போரிலும் வெற்றி பெற்றான். அதன்பின்னர் இங்கு வந்து நாராயணனுக்கு கோயில் கட்டி 1008 பிராமணர்களை குடி அமர்த்தினான். அர்ச்சுனனாகிய விஜயன் நாராயணருக்கு கோயில் அமைத்ததால் இவ்வூர் விஜய நாராயணம் என்று அழைக்கப்படுகிறது.

விஜயநாராயணம் தோன்றும் முன்பே வில்வ மரங்களும், மருதாணி மரங்களும் நிறை ந்த காடாக இருந்தது. நடுவிலுள்ள பொய்கைக்கரையில் தோன்றிய சிவலிங்கத்தை சப்தரிஷிகள் பூஜித்து அருள் பெற்றனர். பௌர்ணமிதோறும் அவர்கள் இரவில் இங்கு பூஜிக்கின்றனர். காலங்கள் கடந்தன. வேடன் ஒருவன் இந்த வனத்திற்கு வேட்டையாட வந்தான். பகலில் எதுவும் கிடைக்கவில்லை. இரவில் ஏதாவது கிடைக்காதா என்று பொய்கைக் கரையிலுள்ள வில்வ மரத்தடியில் அமர்ந்தான். அவனுக்கு நேரமும் போகவில்லை . வேட்டைக்கு எதுவும் கிடைக்கவும் இல்லை. எனவே வில்வத் தலங்களைப் பறித்து ஒவ்வொன்றாக கீழே போட்டுக் கொண்டே இருந்தான். அது அங்கிருந்த லிங்கம் மீது விழுந்தது. விடிந்தே விட்டது, கண்விழித்து பார்த்தபோது பார்வதி தேவியுடன் சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். வேடன் ஆச்சரியத்ததுடன் அவர்களை வணங்கினான்.

“அய்யனே நான் ஒரு பாவி. தேவர்களுக்கு கிடைக் காத தரிசனம் எனக்கு கிடைத்து விட்டது.” என சந்தோஷபட்டான். “வேடனே இன்று சிவராத்திரி. இரவு முழுவதும் பசியுடன் விழித்திருந்து வில்வத்தலங்களால் என்னை அர்ச்சித்தாய். உனக்கு மோட்சம் அளிக்கவே வந்தேன்”. என்றார். “அய்யனே எனக்கு அருளியது போலவே சிவராத்திரியில் இங்கு வந்து பூஜை செய்பவருக்கும் மோட்சம் அளிக்க வேண்டும்” என்றான் வேடன். சிவ பெருமானும் “திருக்கயிலையில் அருள் புரிவது போலவே சிவராத்திரி, பௌர்ணமி நாட்களில் இங்கு வந்து வணங்குபவர்களின் துன்பங்களைத் துடைப்பேன் என்றார். இதனால் இந்த தலத்தில் சிவனை வணங்குபவர்கள் கயிலாயத்திற்குச் சென்று சிவனை வணங்குவதற்கு சமமாகும். தற்போதும் பௌர்ணமி அன்று பல ஆயிரம் மக்கள் இங்கு வந்து வலம்
வருகிறார்கள். கோ யில் முன்பு சிவகங்கைத் தீர்த்தம் என்ற மனோன்மணி தீர்த்தம் உள்ளது. கங்கையின் நேரடி ஊற்று இங்கு உள்ளது என்பது புராண நூல்களின் கூற்று.

இந்த ஊற்று நோய் நொடிகளைத் தீர்க்கும் சக்தியுள்ளது என்கிறார்கள். எனவே வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் பல நோயாளிகளை அழைத்து வந்து தீர்த்தம் மூலம் நோய் தீர்த்துள்ளார். பௌர்ணமி அன்று இங்குள்ள சிவபெருமானை , பார்வதிதேவி முதலில் வலம் வர, தொர்ந்து சப்த ரிஷிகளும், 21 சித்தர்களும் வலம் வந்தனர். தற்போதும் பௌர்ணமி தோறும் இவர்கள் வலம் வந்து சிவனை வணங்குகிறார்கள். எனவே தான் இந்நாளில் இங்கு வணங்குவது வித்தியாசமானதாகும். கோயிலுக்குள் நுழைகிறோம். உள்ளே கொடிமரம், பலிபீடம் உள்ளது. அதைத்தாண்டி உள்ளே நுழைந்தால் அங்கே பக்தர்களுக்கு செ வி
சாய்ந்த நந்தி கம்பீரமாக காட்சியளிக்கிறார். என்ன குறை என்றாலும் சொல். நான் செவிமடுத்து சிவபெருமானிடம் கூறி தீர்த்து வைக்கிறேன் என்ற தோரணையில் நம்மைப் பார்க்கிறார். அதைத்தொர்ந்து சென்றால் மனோன்மணீஸ்வரன் காட்சி தருகிறார்.

இடது புறம் தெற்கு நோக்கி சிவகாமியம்மாள் என்ற மனோன்மணீஸ்வரியும் காட்சி தருகிறார். அவர் அருகே பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வளையல்கள் உள்ளன. இதன் எண்ணிக்கையே குழந்தை வரம் தருபவள் என்பதை நாம் கூறவும் வேண்டுமா?. உள்பிராகாரம் சுற்றுகிறோம். 63 நாயன்மார்களுடன் விநாயகர், தட்சிணாமூர்த்தி, கன்னிமூல விநாயகர், காசி விஸ்வநாதர், முருகன், வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றார். தொடர்ந்து சண்டிகேஸ்வரரும், பை ரவரை யும் தரிசிக்கின்றோம். பௌர்ணமி வலம் வரும் இக்கோயிலில் அகத்தியர் முதல் 21 சித்தர்களின் பீடம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலில் எங்குமில்லாத அமைப்பு என்பதால் பக்தர்கள் சித்தர்களை வணங்கியபடி இருக்கிறார்கள். இத்தலத்தில் அன்னதானம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். எனவே, அன்னதானம் செய்ய 9842193453 என்கிற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

நெல்லை மாவட்டம் நான்குநேரி – திசையன்விளை பாதையில் பரப்பாடிக்கு அடுத்து இடதுபுறமுள்ள பாதையில் 2 கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.

– முத்தாலங்குறிச்சி காமராசு
படங்கள்: சுடலை மணி செல்வன்

நன்றி: தினகரன்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply