உவரி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் இடத்தை சில மீட்டர் தொலைவுக்கு விரிவுப்படுத்தக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.
கூடங்குளம் அணுஉலை வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.49 கோடி செலவில் உவரி கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த தூண்டில் வளைவு பாலமானது, கப்பல் மாதா ஆலயத்தின் இருமருங்கிலும் முறையே 400 மற்றும் 1,800 மீட்டர் நீளத்தில் அமையும் வகையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், தூண்டில் வளைவில் நுழைவுப் பகுதியானது ஆழ்கடல் பகுதியாக இருப்பதால் அதனை தாண்டி நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க செல்வதில் சிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது அமைக்கப்பட்டு வரும் தூண்டில் பாலத்தை இன்னும் சில மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மீனவர் பாதுகாப்பு பொதுச்செயலர் அந்தோணி, உவரி மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் ஜார்ஜ், மீனவர் கூட்டமைப்பு சங்கத் தலைவர் ஜோசப், உவரி பங்குத்தந்தை ஜோசப் மற்றும் உவரி பொதுமக்கள் இணைந்து இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நன்றி: தினமணி
