Breaking News

சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டர் அவதார தினம்

சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வியாழக்கிழமை (மார்ச் 3) கொண்டாடப்படுகிறது.

samithoppu_ayya_vaikundar_thisayanvilai.com

ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி அவதார தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா பதியில் இருந்து புதன்கிழமை (மார்ச் 2) சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி சாமி தலைமையில் பேரணி புறப்பட்டது. இந்த வாகனப் பேரணி திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி, செட்டிக்குளம், ஆரல்வாய்மொழி வழியாக புதன்கிழமை இரவு நாகர்கோவில் நாகராஜா திடலை வந்தடைந்தது. இதேபோல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வடக்கு வாசலில் இருந்து புறப்பட்ட வாகனப் பேரணி திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, பார்வதிபுரம் வழியாக நாகராஜா திடலை வந்தடைந்தது. இதனிடையே புதன்கிழமை மாலை 3 மணிக்கு சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து ஆதலவிளைக்கு மகாதீப பேரணி பூஜிதகுரு பால்பையன் தலைமையில் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திருமண மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு பதி நிர்வாகி பையன் ராஜா தலைமையில் நடைபெற்றது.

அவதார தினம்: அய்யா வைகுண்டரின் அவதார தினமான வியாழக்கிழமை காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலிலிருந்து சாமிதோப்பு நோக்கி மாசி ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, வடக்குத் தாமரைகுளம் வழியாக சாமிதோப்பு தலைமைப் பதியை சென்றடைகிறது. இந்த ஊர்வலத்தில் கேரளம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மட்டுமன்றி தமிழகத்தில் பல்வேறு பகுதி களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பக்தர்களுக்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு சிறப்பு பேருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply