Breaking News

திசையன்விளை அருகே பயங்கரம் அரிசி வியாபாரி மனைவியை கட்டிப் போட்டு 30 பவுன் நகைகள், ரூ.1.10 லட்சம் கொள்ளை நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் 3பேர் வீடுபுகுந்து அட்டகாசம்

திசையன்விளை அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து அரிசி வியாபாரி மனைவியை கட்டிப் போட்டு ரூ.61 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நகைகள், ரூ.1.10 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற 3 முகமூடி கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.

மொத்த அரிசி வியாபாரி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள முதுமொத்தன்மொழி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்(வயது65). வியாபாரி. இவருடைய மனைவி ஜெயராணி.

இவர்களது மகன் முத்துவேல்(27). இவருடைய மனைவி பொன்செல்வி(25). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். முத்துவேல் வீட்டின் முன்பகுதியில் கடை வைத்து அரிசி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். வீட்டில் ஒரு பகுதியில் மனைவியுடன் தர்மராஜூம், மற்றொரு பகுதியில் மனைவி குழந்தைகளுடன் முத்துவேலும் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளுக்கு பின்பகுதியில் காம்பவுண்டு சுவருக்கு அருகில் கழிப்பறை உள்ளது.

முகமூடி கொள்ளையர் புகுந்தனர்
திசையன்விளை பகுதியில் முத்துவேல் பிரபல அரிசி வியாபாரி என்பதால், தினமும் காலை முதல் இரவு வரை லாரி உள்ளிட்ட வாகனங்களின் பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பலரும் வாகனங்களில் வந்து மூடைகளில் அரிசிகளை வாங்கிச் செல்வது வழக்கம். அவருடைய வீட்டுப் பகுதியில் தினமும் காலை முதல் இரவு வரை ஆட்கள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதால், அப்பகுதி பரபரப்பாக காணப்பம். வியாபாரம் முடிந்து முத்துவேல் குடும்பத்தினர் தூங்குவதற்கு நள்ளிரவு ஆகிவிடும்.

முகமூடி, கைகளில் உறை
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரவு சுமார் 9 மணிக்கு மேல் முத்துவேல் குடும்பத்தினர் தூங்கச் சென்று விட்டனர். நள்ளிரவு 11.30 மணி அளவில் கண்விழித்த பொன்செல்வி கழிப்பறை செல்வதற்காக, வீட்டின் பின்பகுதி கதவை திறந்து கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென 3 பேர் முகத்தை துணியால் கட்டிக் கொண்டும், கைகளில் துணியால் உறை அணிந்தவாறும் வந்து பொன்செல்வியை பிடித்து வாயை பொத்தியுள்ளனர். ஒருவர் அவருடைய வாயை துணியால் கட்ட, மற்றொருவர் அவருடைய இரு கைகளையும் பின்னால் வைத்து கயிற்றால் கட்டியுள்ளார்.

30பவுன் நகை கொள்ளை
அவருடைய கழுத்தில் கிடந்த தாலியுடன் கூடிய 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர். பின்னர், பீரோ சாவியை அவரிடம் கேட்டுள்ளனர். சாவி இருக்கும் இடத்தை சொல்ல மறுத்த அவரை, 3 பேரும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி, அவரை வீட்டிற்குள் அழைத்துச் சென்று சாவியை எடுத்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த மேலும் 20 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துள்ளனர்.கொள்ளையடித்த நகைகள், பணத்தின் மொத்த மதிப்பு ரூ.61 லட்சமாகும்.

நகைகள்–பணத்துடன் தப்பினர்
வீட்டிற்குள் இருந்து மீண்டும் பொன்செல்வியை பின்பகுதிக்கு இழுத்து வந்து வெளியே தரையில் குப்புற தள்ளிவிட்டுள்ளனர். 30 பவுன் நகைகள், பணத்துடன் 3பேரும் வீட்டின் பின்பகுதி வழியாக சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர். வாயில் துணிக்கட்டு, கைகள் பின்பகுதியில் கட்டப்பட்ட நிலையில் அதிர்ச்சியுடன் தரையில் கிடந்த பொன்செல்வி, தட்டுத்தடுமாறி எழுந்துள்ளார். வீட்டிற்குள் மெதுவாக தவழ்ந்து சென்று, உறக்கத்தில் இருந்த கணவரை தலையால் முட்டி எழுப்பியுள்ளார்.

போலீசார் விரைவு
மனைவியின் நிலையைப் பார்த்து பதறிப்போன முத்துவேல் கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார். கதறி அழுதவாறு பொன்செல்வி கூறிய தகவல்களைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த முத்துவேல் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். நெல்லை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், உதவி போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், திசையன்விளை இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், சப்–இன்ஸ்பெக்டர் ராபர்டு மற்றும் போலீசார் சம்பவ வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நேற்று காலையில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டின் பின்பகுதி வழியாக அருகில் உள்ள பள்ளிக்கூடம் வரை ஓடி நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. முகமூடி கொள்ளையர்கள் கையுறை அணிந்து இருந்ததால் ரேகைகள் பதிவாகவில்லை என கூறப்படுகிறது.

தனிப்படை விசாரணை
இந்த முகமூடி கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொள்ளைச் சமபவம் திசையன்விளை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலையில் கொள்ளை நடந்த வீடு முன்பு ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

முகமூடி கொள்ளையர்கள் யார்?
போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்,‘ முகமூடி அணிந்து வந்த நபர்கள் அடிக்கடி முத்துவேல் வீட்டுடன் கூடிய அரிசிக் கடைக்கு வந்து சென்றவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக முத்துவேல் வீட்டினரின் நடமாட்டத்தை நன்கு அறிந்து வைத்து கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முத்துவேல் குடும்பத்தினர் வழக்கமாக இரவு 9 மணிக்குள் தூங்கி விடுவது வழக்கம். அதன்பிறகு நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடிக்கவே முகமூடி அணிந்தவாறு கொள்ளையர்கள் வந்துள்ளனர். எளிதாக அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக, முகத்தை துணியால் கட்டிக் கொண்டும், கையுறை அணிந்தும் மிகுந்த எச்சரிகையுடன் கொள்ளையர்கள் வந்துள்ளனர்.கொள்ளையர்கள் எதிர்பாராத வகையில் பொன்செல்வி நள்ளிரவில் கழிப்பறைக்கு வந்துள்ளார். இதையே சாதகமாக கொண்டு, அவரை கட்டிப் போட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், முகத்தை துணியால் கட்டியிருந்தாலும் கொள்ளையர்களின் நடமாட்டத்தை வைத்து கடையில் அரிசி மூடைகள் ஏற்ற வந்துள்ள லோடு மேன்களோ அல்லது ஒரு லோடு மேன் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம். இந்த பின்னணியில், முத்துவேல் வீட்டுக்கு அரிசி மூடைகளை ஏற்ற வந்து செல்லும் லோடுமேன்கள் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நன்றி : தினத்தந்தி

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply