சென்னை : அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா டெல்லியில் திடீரென்று மாயமனார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தூத்துக்குடி நகராட்சி மேயர், மகளிர் அணி தலைவி, மாநிலங்களவை எம்பி என்று தொடர்ந்து பல்வேறு பதவிகளைப் பெற்று அசுர வளர்ச்சி பெற்று வந்த, சசிகலா புஷ்பா, டெல்லி விமானநிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை தாக்கினார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை அழைத்து விசாரணை நடத்தினார். அதன்பின் திங்கட்கிழமை காலையில் நாடாளுமன்றத்தில் பேசிய சசிகலா புஷ்பா, தன்னை கட்சியின் தலைவர் தாக்கினார். ராஜினாமா கடிதங்களை எழுதி வாங்கினார். நான் ராஜினாமா செய்ய மாட்டேன். எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறேன். எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் எனக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். எனது பாதுகாப்பை நாடாளுமன்ற அவைத் தலைவர் உறுதி செய்ய வேண்டும் என்றார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதன்பின் டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த சசிகலா புஷ்பா, அதிமுக குறித்தும், அக்கட்சியின் தலைவர் ஜெயலலிதா குறித்தும் விமர்சனம் செய்தார். இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து, நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள கரைச்சுத்து உவரியில் உள்ள வீடு தாக்கப்பட்டது. இந்தநிலையில், டெல்லியில் அவரது வீட்டில்தான் சசிகலா புஷ்பா தங்கியிருந்தார். ஆனால் சென்னை மற்றும் தூத்துக்குடியில் உள்ள உறவினர்கள் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் யாரிடமும் பேசவில்லை. டெல்லியில் அவரது வீட்டில் உள்ள டெலிபோனில் பேசினால், வேலைக்கார பெண் எடுத்து, அவர் வெளியில் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் நேற்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை. இந்த தகவல் வெளியில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்திற்கும் அவர் நேற்று செல்லவில்லை.
இதனால் சசிகலா புஷ்பாவின் வீட்டுக்கு நேற்று காலை மற்றும் இரவு நேரங்களில் பத்திரிகையாளர்கள் சென்றனர். அப்போதும் அவரது வீட்டில் உள்ள ஊழியர்கள் அவர் வெளியில் சென்றிருப்பதாக தெரிவித்தனர். இரவு நேரத்திலும் செல்போன் அழைப்புகளை அவர் எடுக்கவில்லை. ஆனால் வீட்டில் டெல்லி போலீசாரின் பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன்