காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், உடனடியாக காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதன்கிழமை ரயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தென்காசியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ்.எஸ்.போஸ் தலைமை வகித்தார். முத்துசாமி, கணேசன், கான், சாமி, மாரியப்பன், சுந்தர், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 22 பெண்கள் உள்ளிட்ட 63 பேரை தென்காசி போலீஸார் கைதுசெய்தனர்.
இதேபோல் தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டச் செயலர் குமார் தலைமை வகித்தார். மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
வள்ளியூர்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வள்ளியூர் பழைய பேருந்து நிலையம் முன் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை வள்ளியூர் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது அங்கிருந்து சிலர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.வி.கிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டு வந்து வள்ளியூர் அஞ்சல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் அக்கட்சியின் விவசாய அணி மாநிலச் செயலர் பெரும்படையார், என்.எஸ்.மணியன், சி.எஸ்.மணியன், வேம்புசுப்பையா, சந்தானம் உள்ளிட்ட 40 பேரை வள்ளியூர் போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் பயணிகள் முன் மேற்கு மாவட்ட திமுக செயலர் சிவபத்மநாபன் தலைமையில் நடைபெற்ற மறியலில், காங்கிரஸ் மேற்கு மாவட்டத் தலைவர் பழனி நாடார், விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் டேனிஅருள்சிங், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலர் எம்.குருசாமி, திமுக பொதுக்குழு உறுப்பினர் க.அன்புமணி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கோ.சுப்பையா, ஒன்றியச் செயலர் சங்கரபாண்டியன், முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் அ.க.அண்ணாவியப்பன், மாரியப்பன், திமுக நகரச் செயலர் சங்கரன், மதிமுக நகரச் செயலர் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்ளிட்ட 390 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் முற்பகல் 11.35 மணிக்கு செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி சென்ற பயணிகள் ரயிலை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் வேலாயுதம், அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்ற பரமசிவன், ஈஸ்வரன், முருகன், காமாட்சிநாதன், சட்டநாதன், வடிவேல், கல்யாணசுந்தரம் மற்றும் 2 பெண்கள் உள்பட 48 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்…
அம்பாசமுத்திரம்: விக்கிரமசிங்கபுரம் மூன்று விளக்குத் திடலிளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. செயலர் கணேசன் தலைமை வகித்தார். இதில் மாநிலக் குழு உறுப்பினர் பரணிசேகர், தேர்தல் பணிக்குழு செயலர் ராஜம்ஜான், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி அருணன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் கட்சி ரவீந்திரன், இசக்கிராஜ், காங்கிரஸ் நகரச் செயலர் செல்லத்துரை, முருகேசன், சங்கரநாராயணன், முஸ்லிம் லீக் மாவட்டப் பொருளாளர் கானகத்தி மீரான், நகரத் தலைவர் அபுபக்கர், ம.தி.மு.க. நகரச் செயலர் பெரியசாமி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.
திசையன்விளை: திசையன்விளை பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தலைமை வகித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அமைக்காத மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி.ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பி.கே.ஜெயக்குமார், காங்கிரஸ் முன்னாள் அமைப்புச் செயலர் சேம்பர் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் ரைமண்ட், அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சுயம்புராஜன், ராம் கிஷோர் பாண்டியன், விஜய பெருமாள், மருதூர் மனிமாறன், பிலிப்போஸ் டேனியல், மும்பை ஜான் கென்னடி, நசுருதின், விவேக் முருகன், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர்கள் மோகன் குமாரராஜா, தமிழ்செல்வன் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நன்றி: தினமணி
