மதுரை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி.,யின் முன் ஜாமின் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
சசிகலா புஷ்பா தாக்கல் செய்த மனு: எங்கள் வீட்டில் வேலை செய்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சி ராணி புகாரின்படி, துாத்துக்குடி புதுக்கோட்டை மகளிர் போலீசார் 2016ல் என் மீதும், குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிந்தனர். வழக்கை வாபஸ் பெறுமாறு கட்டாயப்படுத்தி, கையெழுத்து வாங்கியதாக, எங்களுக்கு எதிராக, திசையன்விளை போலீசில் பானுமதி புகார் செய்துள்ளார்.தற்போது அரசியல்விரோதத்தில், பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு சசிகலா புஷ்பா மனு செய்திருந்தார். இதுபோல் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், தாய் கவுரி முன்ஜாமின் மனு செய்திருந்தனர். அப்போது விசாரித்த நீதிபதி ஜெ.நிஷாபானு, ‘மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என்ற இடைக்கால உத்தரவு ஜூன் 5 வரை நீட்டிக்கப்படுகிறது’ என ஏப்., 20ல் உத்தரவிட்டார்.இந்நிலையில் நேற்று, கோடை விடுமுறைகால நீதிமன்ற நீதிபதி என்.ஆதிநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர், ‘இவ்வழக்கு ஜூன் 5ல் விசாரணைக்கு வருவதற்கு பதிலாக, தற்போது தவறுதலாக வழக்குப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது’ என்றார்.நீதிபதி ஜூன் 5க்கு ஒத்திவைத்தார்.
நன்றி : தினமலர்
