Breaking News

திசையன்விளை அருகே இளம்பெண் கற்பழித்து கொலையா? போலீசார் தீவிர விசாரணை

திசையன்விளை

திசையன்விளை அருகே நிர்வாண நிலையில் இளம்பெண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:–

இளம்பெண் பிணம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள காரம்பாடு ஓடை பகுதியில் இளம்பெண் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், திசையன்விளை(பொறுப்பு) கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைப்பாண்டி சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில், திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜா, சப்–இன்ஸ்பெக்டர் மதிபால் மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். ஓடைப் பகுதியில் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது.

கற்பழித்து கொலை?
அந்த பெண்ணின் உடலுக்கு அருகில் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாக்கெட்டுக்கள் கிடந்தன. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதிக்கு தடயவியல் நிபுணர் ரொனால்டு வரவழைக்கப்பட்டு, காலி மதுபாட்டில்கள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி ஆய்வு செய்தார்.

நிர்வாண நிலையில் கிடந்த அந்த பெண் அணிந்திருந்த உடைகள் ஏதும் அப்பகுதியில் கிடக்கின்றனவா? அல்லது தீ வைத்து எரிக்கப்பட்டதா? என்பது குறித்து அப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அதற்கான தடயங்கள் ஏதும் கிடைக்கவில்லை. பெண் உடைகளும் சிக்கவில்லை.

குடிமகன்கள் கைவரிசை?
இறந்த பெண்ணின் முகமும் சிதைந்து இருந்ததால், அவர் யார்? என உடனடியாக தெரியவில்லை. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டரா? வேறு பகுதியில் கொலை செய்யப்பட்டு இந்த பகுதியில் பிணமாக வீசப்பட்டாரா? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த பகுதியில் குடிமகன்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆங்காங்கே காலி மதுபாட்டில்கள் ஏராளமாக கிடந்துள்ளன. எனவே, அந்த பகுதிக்கு அடிக்கடி சென்று வரும் குடிமகன்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அந்த பெண்ணை இந்த பகுதிக்கு கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது கொலையாளிகளுக்கு அறிமுகமான பெண் உடன் வந்த இடத்தில் பிரச்சினை ஏற்பட்டதில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சூப்பர் இம்போசிங்…

கொலையான பெண்ணின் மண்டை ஓடு சென்னைக்கு அனுப்பப்பட்டு ‘சூப்பர் இம்போசிங்’ முறையில் அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், சுற்றுப்புறப் பகுதியில் இளம்பெண் யாரும் காணாமல் போயிருக்கிறார்களா? எனவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நன்றி : தினத்தந்தி

About Eesu

Check Also

விடாது பெய்யும் பெருமழை.. 24 மணி நேரமாக இருளில் மூழ்கிய திசையன்விளை தாலுகா.. தொலைதொடர்பும் துண்டிப்பு

நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. திசையன்விளை தாலுகாவில் கடந்த 24 மணி …

Leave a Reply