புதன், மே 20,2015
திசையன்விளை செல்லும் பஸ் வராததால் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ் வரவில்லை
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திசையன்விளை, சாத்தான்குளம், பேய்குளம், முனைஞ்சிப்பட்டி, மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களுக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை என்று புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முகூர்த்தநாள் என்பதால் வழக்கத்தைவிட, புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. திசையன்விளைக்கு செல்லும் பஸ் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
போராட்டம்
இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ் நிலையத்தில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திசையன்விளை பஸ்கள் நிற்கும் பிளாட்பாரம் பகுதியில் தரையில் அமர்ந்தனர். இதனால் நாகர்கோவில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் ஆகிய இடங்களுக்கு செல்கின்ற பஸ்களும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போக்குவரத்து கழக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பஸ்சின் படிக்கட்டு உடைந்து இருந்ததால் அதிலும் பயணிகள் ஏற மறுத்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார்கள்.
நன்றி: தினத்தந்தி
