அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் அவதாரபதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
அய்யா வைகுண்டர் அவதார தின விழா
அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதாரபதியில், அய்யா வைகுண்டர் அவதார தின விழா கடந்த 2 நாட்கள் நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலையில் பணிவிடை, உகப்படிப்பு, அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிப்படிப்பு, பணிவிடை, அன்னதர்மம் நடந்தது. மாலையில் பணிவிடையை தொடர்ந்து, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இரவில் அன்னதர்மம் நடந்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
அய்யா வைகுண்டர் அவதார தினமான நேற்று அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக காலை 6.30 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிடுதலும், அவதார விழா பணிவிடையும் நடந்தது.
கடற்கரையில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘அய்யா சிவசிவ சிவசிவா அரகரா அரகரா’ என்று பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதர்மம் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் பி.சுந்தரபாண்டி, செயலாளர் எஸ்.தர்மர், பொருளாளர் ஏ.ராமையா நாடார், துணைத்தலைவர் எஸ்.தங்கத்துரை நாடார், துணை செயலாளர் ஏ.ராஜேந்திரன் நாடார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.
நாகர்கோவில்
அய்யா அவதார தின விழாவையொட்டி நேற்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின விழா ஊர்வலம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அகிலத்திரட்டு ஆகம நூலை எடுத்து வைத்து, காவிக்கொடிகள் பறக்க முத்துக்குடைகளை ஏந்தி மேள- தாளத்துடன் ஊர்வலத்தை தொடங்கினர். இந்த ஊர்வலத்துக்கு பூஜிதகுரு சுவாமி தலைமை தாங்கினார். பூஜித குருக்கள் தங்கபாண்டியன், பையன் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தில் அகிலத்திரட்டு வாகனம் முன்னே செல்ல அதை பின்தொடர்ந்து பல்வேறு நிழல்தாங்கல்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் அணிவகுத்து சென்றனர்.
ஊர்வலம் கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை சந்திப்பு, ஈத்தங்காடு சந்திப்பு வழியாக சாமிதோப்பை அடைந்தது.
சுருள் வைத்து வழிபாடு
ஊர்வலம் சாமிதோப்பை அடைந்ததும், அகிலத்திரட்டு வாகனம் அங்குள்ள முத்திரிக்கிணற்றை சுற்றி வடக்கு வாசல் வழியாக, கிழக்கு வாசலை அடைந்தது. பின்னர் பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் (வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர் போன்றவை) வைத்து வழிபட்டனர். அதன்பின்னர் அய்யா தலைமைப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
நன்றி:தினத்தந்தி
