திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 47 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், அதன்ஒரு பகுதியாக திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: திசையன்விளையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும். அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம் அருகே வாகைகுளம் பகுதியில் 240 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். கீழப்பாவூர் ஒன்றியம், பெத்தநாடார்பட்டியில் அரசு கால்நடை மருந்தகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.
பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் கல்லூரிக்குச் சென்று வர ஏதுவாக, கீழப்பாவூரிலிருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து வசதி செய்து கொடுக்கப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட ராமநதி, ஜம்பு நதி மேல்மட்டக் கால்வாய் திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்டப் பணிகளுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ராமநதி அணையைத் தூர்வார நடவடிக்கை: இம் மாவட்டத்தில் சுமார் 4,943 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன உறுதி பெறும் பொருட்டு ராமநதி அணை தூர்வாரப்படும். நம்பியாற்றின் குறுக்கே கண்ணநல்லூர் பகுதியில் தடுப்பணை கட்டப்படும். கல்லிடைக்குறிச்சி அருகே எலுமிச்சை ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டப்படும். வீரகேரளம்புதூர் வட்டம், அகரம் கிராமத்தில் சிற்றாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். சுரண்டையில் அனுமன்நதி சிற்றாற்றில் கலக்கும் இடத்திற்கு மேல்புறம் தடுப்பணை கட்டப்படும். மேலும், அருந்தவ பிராட்டி அணைக்கட்டிற்கு கீழ்புறம் தடுப்பணை கட்டப்படும்.
கடையநல்லூர் வட்டம், சிந்தாமணி கிராமத்தில் கோட்டமலையாற்றின் அச்சந்திகுளம் பிரியும் இடத்தில் படுகை அணை கட்டப்படும். சங்கரன்கோவில் வட்டம், பனையூர் கிராமத்தில் நிட்சேப நதியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அதிநவீன உபகரணங்கள், தாய்சேய் நலப்பிரிவிற்கு நவீன கருவிகள் மற்றும் மாரடைப்பு சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படும். கண்டிகைப்பேரி அரசு மருத்துவமனையில் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதல் உதவி சிகிச்சை அளிக்க ஏதுவாக அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும்.
மருத்துவ சிகிச்சை கருவிகள்: இம் மாவட்டத்தில் புதிதாக ஒரு மருந்து கிடங்கு கட்டப்படும். இம் மாவட்டத்தில் பணியாற்றும் 379 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவப் புள்ளி விவரங்களைப் பதிவு செய்ய கையடக்க கணினிகள் வழங்கப்படும். மேலநீலிதநல்லூர் மற்றும் ராதாபுரம் வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
சொக்கம்பட்டி மற்றும் வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 2 டயாலிசிஸ், எண்டோஸ்கோபி உள்ளிட்ட அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும். புற்றுநோயாளிகளுக்கான வலி நிவாரணம் மற்றும் ஆதரவு சிகிச்சை மையம், கட்டணமில்லா கருத்தரிப்பு மையங்கள் உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்படும்.
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், டயாலிசிஸ் உள்ளிட்ட கருவிகள் மற்றும் தடுப்பூசி சேமிப்பு கிடங்கு அமைக்கப்படும். ரெட்டியார்பட்டி அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும். கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவி வழங்கப்படும். பெத்தநாடார்பட்டி கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். பாளையங்கோட்டை ஒன்றியம், முத்தூர் ஊராட்சி, காமராஜ் நகர் பகுதியில் புதிய துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும். திசையன்விளையில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பல்நோக்கு சமுதாய நலக் கூடம் கட்டப்படும்.
சாலை மேம்பாட்டுப் பணிகள்: தாழையூத்து முதல் டக்கரம்மாள்புரம் வரை மதுரை – கன்னியாகுமரி சாலையை இருவழித்தடத்திலிருந்து நான்குவழித் தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படும். திருநெல்வேலி புறவழிச்சாலையை நான்குவழிச் சாலையாக மத்திய தடுப்புடன் (குறுக்கு வடிகால் உள்பட) அகலப்படுத்தி மேம்பாடு செய்யப்படும். இடைகால் – சேர்ந்தமரம் சாலை, சங்கரன்கோவில் – வாசுதேவநல்லூர் சாலை, ராதாபுரம் – இடையன்குடி சாலை, சாம்பவர் வடகரை சாலை, திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் சாலை ஆகியவை அகலப்படுத்தி உறுதிப்படுத்தப்படும்.
ரயில்வே மேம்பாலங்கள்: மதுரை – கன்னியாகுமரி சாலையில் ரயில்வே கடவு எண் 4 அருகே திருநெல்வேலி-செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். நாங்குனேரி- ஏர்வாடி – வள்ளியூர் – விஜயாபதி சாலையில் ரயில்வே கடவு எண் 82 பி அருகே நான்குனேரி- வள்ளியூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். காவல்கிணறு -ராதாபுரம் சாலையில் ரயில்வே கடவு எண் 74 பி அருகே வடக்கு பணகுடி-ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.
அம்பாசமுத்திரம், தென்காசி மற்றும் சங்கரன்கோவிலில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். திருநெல்வேலி – மதுரை – கன்னியாகுமரி சாலையில் தாமிரவருணி பழைய ஆற்றுப் பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்டப் பாலம் கட்டப்படும். கரம்பை பொட்டல் சாலையில் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். வாசுதேவநல்லூர் – பூலாங்குளம் சாலையில் உயர்மட்டப் பாலம் கட்டப்படும். செண்பகபுரம்- மீனாட்சிபுரம் சாலையிலும், கோதைச்சேரி சாலையிலும், ரெட்டியார்பட்டி – விஜயநாராயணம் சாலையிலும், குற்றாலம்-மத்தளம்பாறை சாலையிலும் உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும்.
அம்பாசமுத்திரம் வட்டம், கோவிந்தப்பேரி கிராமத்தில் உள்ள மனோ கல்லூரியில் முதல் மாடி கட்டட பராமரிப்புப் பணி மற்றும் சுற்றுச்சுவர் கட்டித் தரப்படும். ராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் சுரண்டை காமராசர் அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றிற்குக் கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரப்படும் ‘ என்றார் அவர்.
நன்றி : தினமணி