அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள். இவள் மும்மூர்த்திகளுக்கும் மூத்தவள்; மும்மலங்கள், முச்சந்திகள், மூன்று காலங்கள், மூவுலகங்கள் என மூவகைப் பிரிவுகளுக்கெல்லாம் இவள் உரியவள் என்கிறது கௌடபாத சூத்திர உரை, சந்திர கண்டம். சூரிய கண்டம். அக்கினி கண்டம் என்றும் முப்பிரிவுடைய சக்கரத்திற்கு இவளே தலைவி என்றார் அபிராமி பட்டர். திருமூலர் தன் திருமந்திரத்தில், பராசக்தி சாதகர்களுக்கு சாதகமான பாலா ஆவாள். அவளே முக்திக்கும் தலைவி. இதை மக்கள் அறியாமலிருக்கிறார்கள் என்று பாடியுள்ளார்:
‘‘சக்தி என்பாள் ஒரு சாதகப் பெண் பிள்ளை முக்திக்கும் நாயகி என்பதை அறிகிலர் பத்தியை பாழில் உருத்த அப்பரிவகள் சுத்திய தாய் போல கதறுகின்றனவே (1199) வாலையை வழிபடுவோருக்கு சுகம், பரமசுகம் கிடைக்கும். அவள் நல்லவருக்கு நடுவே விளையாடுவாள். வல்லவருக்கெல்லாம் வல்லவளாய் ஆட்சி செய்வாள். அவளைவிட அரியதான சூட்சுமம் ஏது?’ என்று கேட்கிறார் கருவூர் சித்தர். அவள் உன்னதமான சூட்சுமக்காரி. நாத தத்துவத்தையும். சுத்த மாயையும். ஓங்கார நிலையையும் அவள் தன் உபாசகனுக்கு உணர்த்துவாள். ‘‘ஓங்கார சொருபிணி’’ என்று சித்தர் கூட்டம் அவளையே போற்றும் இத்தனை சிறப்பு வாய்ந்த வாலை தெய்வத்தையே சித்தர்கள் அகப்புற வழிகளில் பூசை செய்தார்கள். வாலை அம்பிகையை தியானிப்பது ஸர்வ மங்களங்களையும் அருளும். இவ்வளவு மகிமை வாய்ந்த பாலாம்பிகை தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டையில் அருளாட்சி புரிகிறாள். இங்கு கோயில் கொண்டுள்ள ஸ்ரீவாலை குருசுவாமியும் அவரின் சீடர் ஸ்ரீகாசியானந்தரும் வாலையை வழிபட்டு சித்தி பெற்று தன் தாயின் பெயரையே தம் பெயராகக் கொண்டனர்.
தான் உபாசித்த தாயை உலக மக்களும் உபாசித்து சுகம் பெற வேண்டி வாலாம்பிகைக்கும் சந்நதி எழுப்பி மக்கள் ஆன்மிக நலன் பெற உதவியிருக்கிறார்கள். குருசுவாமியும் அவரின் சீடரும் ஒரே கருவரையில் திருவருட்பாலிக்கின்றனர். இவ்விருவரையும் முழுமையாக சரணடைந்து குருவின் அனுகிரகத்தை முதலில் பெற்று பின் வாலாம்பிகையை வணங்க சகல பாக்கியங்களையும் அடைவது நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆலயத்தின் வெளி பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் தெற்கு நோக்கி ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அருள்கிறார். இவரை வழிபட்டால் நமது ஜன்ம பாவ வினைகள் அனைத்தும் தீரும். நினைத்த காரியம் தடையின்றி எளிதில் கைகூடும். இவருக்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறுகின்றன. பிராகாரத்தில் அணிக்கை விநாயகர். மாணிக்கவாசகருடன், ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜர் ஸ்ரீமனோன்மணி அம்பாள், ஸ்ரீசந்திரசகர மூர்த்தி. கன்னி விநாயகர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், பிரதோஷ நந்தி மற்றும் நித்யானந்த மண்டபத்தில் அன்னபூரணி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
வெளிப் பிராகாரத்தில் மஞ்சணத்தி மரத்தடியில் ஸ்தல விருட்ச விநாயகரும், உச்சிஷ்ட கணபதியும் அருள்பாலிக்கிறார்கள். பண்டாசுரனுடன் நடந்த யுத்தத்தில் அகர தளபதி ஒருவன். விக்ன யந்திரத்தை ஸ்ரீநகர கோட்டைக்குள் லலிதாம்பிகையின் சகல தோழியரும், மந்த்ரிணியும் புகமுடியாதபடி எறிந்துவிடுகிறான்.
இதனால் லலிதையின் சக தோழியரும். தளபதியும், மந்த்ரிணியும் ஸ்தம்பனம் ஆகிவிட்டனர். அப்பொழுது கணபதி அந்த அகர எந்திரத்தை அழித்து அவர்களை சகஜ நிலைக்குக் கொண்டுவந்தார். அம்பிகை லலிதை அகம் மகிழ்ந்து மகா சித்த கணபதிக்கு தன் ஸ்ரீநகர கோட்டையில் முக்கிய அந்தஸ்தை அளித்தாள். இதனாலேயே பாலா வழிபாட்டில் ஸ்ரீவித்யா உபாசனையில் கணபதி வழிபாடு பிரதானம் ஆகும், மஹா கணபதி மந்திரம் மூலாதாரமாகச் சொல்லப்
படுகிறது, உபாசனையின் நிறைவில் உச்சிஷ்ட கணபதி மந்திரம் உபதேசம் ஆகி அதுவும் ஆவிருத்திகள் (பல முறை சொல்லுதல்) செய்யப்படும். வாலையை அணுக இவரை வணங்கினால் தடையின்றி அம்பிகையின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தி அன்றும் இந்த உச்சிஷ்ட கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
இந்த பாலா க்ஷேத்ரத்தில் ஸ்ரீபாலாம்பிகை அன்னாலயா என்ற மண்டபத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. நித்யானந்த மண்டபத்தில் எழுந்தருளியருக்கும் ஸ்ரீஅன்னபூரணிக்கு அன்னதான பூஜை, அதைத் தொடர்ந்து அடியார்கள் அனைவருக்கும் அன்னதானம் நடத்தப்படுகிறது. ‘எவரேயாயினும் அவர்களுக்கு கொடுங்கள். அவர் உயர்ந்தோர் இவர் தாழ்ந்தோர் என எண்ணாதீர்கள். வரும் விருந்தினரை எதிர்பார்த்து அவருடன் கூடி உண்ணுங்கள்’ என திருமூலர் சொன்னதுபோல் இங்கே அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. 300 பக்தர்கள் ஒரே சமயத்தில் அமர்ந்து உணவு அருந்தலாம். உணவு நவீன உபகரணங்களின் உதவியால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு அன்புடன் பரிமாறப்படுகிறது. வெளியூர் பக்தர்களுக்கு தங்க அறை வசதியும் உண்டு. ஸ்ரீவாலை குரு சுவாமியே நேரில் வந்து திருமாத்திரையை கொடுத்து பக்தர் ஒருவரை பெரும் பிணியில் இருந்து காத்தருளியதாக ஐதீகம்.
அன்று முதல் அன்பர்கள் திருக்கோயிலில் உள்ள வேப்பிலை, மஞ்சணத்தி இலை, வில்வம் இலை, புளிய இலை, எலுமிச்சை பழச்சாறு இவற்றுடன் திருநீறு மற்றும் திருமண் சேர்த்து. திருக்கோயிலின் பிராகாரத்தில் உள்ள அம்மிகளில் அவரவர்களே அரைத்து. இறைவனின் திருவடியில் வைத்து பின் அருந்தி வருகிறார்கள், திருமாத்திரை அக மற்றும் புற நோய்களுக்கு அரு மருந்தாகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. தலவிருட்சம் கோயிலின் பிராகாரத்திலுள்ள மஞ்சணத்தி மரமே ஆகும். இந்த விருட்சத்தின் நிழலிலேயே ஸ்ரீவாலை குருசுவாமியும். ஸ்ரீகாசியானந்தரும் ஸ்ரீவாலை பூஜை செய்து வந்ததாக நம்பப்படுகிறது. இந்த மரத்தின் வயது பல நூறு வருடங்களுக்கு மேல் இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அந்த மரம் பட்டுப் போனது. பக்தர்கள் மனக் கவலையுடன் இருந்தனர். புதிய மஞ்சணத்தி கன்றுகளை நடலாம் என யோசனை எழுந்தது.
‘புதிய மரம் எதுவும் நடத் தேவையில்லை; பட்டமரம் துளிர்க்கும்’ என பாலாவின் உத்தரவு கிடைத்தது. சில மாதங்களிலேயே அதே மஞ்சணத்தி மரம் துளிர்த்து, வளர்ந்து பக்தர்களின் மனக்குறையை போக்கியது! இதுபோல் இன்னும் எத்தனையோ அற்புதங்கள் தினம் தினம் நடந்து கொண்டே இருக்கின்றன. க்ஷேத்ர வலப்பாதையில் அமைந்துள்ளது ஒரு பசுமடம். கோமாதா வழிபாடு அன்னை லலிதையை வணங்குவதாகும். பாலா உபாசனை செய்தால் பாலுக்கு பஞ்சமிருக்காது என்பது சாஸ்திரம். பசுவை பூஜிப்பவரிடத்தில் பாலா தேவி சீக்கிரம் வந்துவிடுவாள். பசு பரிபாலனம் செய்யுமிடத்தில் மகிழ்ச்சி கொண்டு அங்கேயே தங்கி விடுவாள். வசிஷ்டருடைய ஆசிரமத்தில் காமதேனுவாய் இருந்தவள் பாலாம்பிகையே என்பது ஞானிகளின் நம்பிக்கை. பாலா க்ஷேத்ரத்தில் பசுக்கள் இயற்கையான சூழ்நிலையில் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறது.
கொம்மடிக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து உடன்குடி வழியாக திசையன்விளை செல்லும் வழியில் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
– ந.பரணிகுமார்
நன்றி: தினகரன்
