ஜூலை 3, 2015
பெங்களூரைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது26). சர்வதேச கைப்பந்து வீராங்கனையான இவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டக்கோட்டையை சேர்ந்த நவீன் ராஜா ஜேக்கப் (28) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இவரும் சர்வதேச கைப்பந்து வீரர்.
கடந்த 6 ஆண்டுகளாக நவீனும் பிரியங்காவும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நவீன் தன்னை திருமணம் செய்யாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக பிரியங்கா கடந்த 29–ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:–
பெங்களூரை சேர்ந்த நானும் சென்னை மாம்பலத்தில் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வரும் நவீனும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இருவருமே சர்வதேச அளவில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்ற போது பழக்கம் ஏற்பட்டது.
நாங்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் – மனைவி போலவே வசித்து வந்தோம்.
கோடம்பாக்கத்தில் நவீன் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். அவரது சொந்த ஊரான சாத்தான்குளம் சுண்டக்கோட்டைக்கும் அழைத்து சென்றுள்ளார்.
அங்கும் நான் அவருடன் தங்கி இருந்துள்ளேன். அவரது ஊரிலும் என்னை மனைவி என்றே அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் அவருக்கும் கோவை போலீஸ் அதிகாரி ஒருவரின் மகளுக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அழைப்பிதழும் அச்சடித்து விட்டனர்.
கோவையில் திருமணத்தை முடித்து விட்டு நவீனின் சொந்த ஊரான சுண்டக்கோட்டையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனை சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகி எமி என்பவர் என்னிடம் தெரிவித்தார். அவரும் சர்வதேச அளவில் தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
இதன் பிறகு இந்த திருமணம் பற்றி நவீனிடம் கேட்ட போது, “தனக்கு பணமும் அந்தஸ்தும் தான் முக்கியம். என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது” என்று மறுத்தார். மேலும் போனிலும் தொடர்பு கொண்டு அடிக்கடி மிரட்டினார். அவரது உறவினர்களும் பெங்களூருக்கே வந்து என்னை மிரட்டினார்கள்.
ஆரம்பத்தில் நவீன்தான் என்னிடம் காதலை சொன்னார். நான் மறுத்தபோது கைகளில் பிளேடால் வெட்டிக்கொண்டார். அதன் பின்னரே நான் மனம் மாறி காதலிக்க தொடங்கினேன். இப்போது என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை மோசடி செய்து ஏமாற்றி விட்டார்.
எனவே அவர் மீதும் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கெள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு குறித்து விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஜெயக்குமார் மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் சியாமளாதேவி, நவீனிடம் விசாரணை நடத்தினர்.
புகார் கொடுத்த பிரியங்காவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது நவீன் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதையடுத்து நவீன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இதன் பேரில் பிரியங்கா அளித்த புகார் மனு தி.நகர் துணை கமிஷனர் சரவணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, நவீன் மீது திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றுதல் (417 ஐ.பி.சி.), மிரட்டல் (506(1), பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.
உதவி கமிஷனர் ராதா கிருஷ்ணன், மாம்பலம் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று அதிகாலை நவீனை கைது செய்தனர். அவர் இன்றே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
பிரியங்காவை மிரட்டியதாக நவீனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
நவீனுக்கும் கோவை போலீஸ் அதிகாரி மகளுக்கும் கோவையில் வருகிற 13–ந்தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான அழைப்பிதழ்களும் அச்சடித்து கொடுக்கப்பட்டு விட்டன.
நன்றி: மாலைமலர்
