Breaking News

6 ஆண்டுகளாக நிதி ஒதுக்கியும் அரை அடி பணி கூட நடக்கவில்லை:தவியாய் தவிக்கிறது தாமிரபரணி கால்வாய்

திருநெல்வேலி:தாமிரபரணி– நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயில் முறையாக செலவழிக்காத நிலையில் இந்த ஆண்டும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி தண்ணீர் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின்விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. நவம்பர், டிசம்பரில் வெள்ள நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதை தடுத்து வறட்சி பகுதியான திசையன்விளை, நாங்குநேரியில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் வகையில் 2009 தி.மு.க.,ஆட்சியில் நதிநீர் இணைப்பு திட்டம் துவக்கப்பட்டது. 369 கோடி ரூபாய் செலவில் 2013ல் இதனை முடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தாமிரபரணியில், கன்னடியன்கால்வாயில் வெள்ளங்குழி என்னுமிடத்தில் தனிக்கால்வாய் தோண்டப்பட்டு 73 கி.மீ.,துாரமுள்ள திசையன்விளை அருகே எம்.எல்.தேரி குளத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
பாதி பணிகளுடன் நிறுத்தம்
நான்கு கட்டங்களாக பிரிக்கப்பட்டு தி.மு.க., ஆட்சியிலேயே 2 கட்டப்பணிகள் முடிக்கப்பட்டன. 35 கி.மீ.,துாரம் மூலைக்கரைப்பட்டி வரை கால்வாய் தோண்டப்பட்டுவிட்டது. 2011ல் வந்த அ.தி.மு.க., ஆட்சிக்கு பிறகு கடந்த 7 ஆண்டுகளாக ஒரு அங்குலம் கூட கால்வாய் தோண்டப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது.
கடந்த 2017ல் அமைச்சர் ஜெயக்குமார் சமர்ப்பித்த ட்ஜெட்டில் இந்த திட்டத்திற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். ஆனால் இம்மியளவும் பணியில் முன்னேற்றமில்லை.இதுகுறித்து திட்ட கண்காணிப்பு பொறியாளர் ஆசைத்தம்பியிடம் கேட்டபோது,கடந்த பட்ஜெட்டில் நில ஆர்ஜிதத்திற்கு 200 கோடியும் திட்டப்பணிகளுக்கு 100 கோடியும் தரப்பட்டது. நில ஆர்ஜித நிதியை வருவாய்த்துறையிடம் ஒப்படைத்துவிட்டோம். அந்த நிதி செலவிடப்பட்டதா என்பதை வருவாய்த்துறை அதிகாரிகளிடம்தான் கேட்கவேண்டும் என்றார்.
வருவாய்த்துறை அதிகாரிகளோ பணிக்கு தேவையான தாசில்தார்கள், நிலஅளவையாளர்களை அரசு வழங்க மறுக்கிறது. வெறும் நிதியை வைத்து எதுவும் செய்யமுடியாது. எனவே நிதியை திருப்பி அனுப்பிவிடுகிறோம் என்றனர். மொத்தத்தில் ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கப்படுவதும் பணிகள் நடக்காமல் அவை அரசுக்கு திருப்பியனுப்பப்படுவதாக கணக்கு காட்டுவதுமே கடந்த ஏழு ஆண்டுகளாக நடக்கிறது.

நன்றி  : தினமலர்

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply