திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
திசையன்விளை நெடுவிளை தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் கணேசன். இவரது மனைவி சேர்மக்கனி (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.
ஆம்புலன்ஸ் வாகனம் நான்குனேரி சுங்கச்சாவடி அருகே சென்றபோது, சேர்மக்கனிக்கு பிரசவ வலி அதிகமானதால் வாகனத்தை நிறுத்தி மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி பிரசவம் பார்த்தனர். இதில் சேர்மக்கனிக்கு ஆண் குழந்தை பிறந்தது. உடனே, தாயையும் குழந்தையையும் நான்குனேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களான ராஜேஸ்வரி, வாகன ஓட்டுநர் கல்யாணசுந்தரம் ஆகியோரை சேர்மக்கனியின் உறவினர்கள் பாராட்டினர்.
நன்றி : தினமணி