ஜூலை 16, 2015
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிரவீன் (வயது12), நவீன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2–வது திருமணம் செய்த ராஜ்குமார் தனது முதல் மனைவியின் குழந்தைகளான பிரவீன், நவீன் ஆகியோரை சரியாக பராமரிக்காமல் சித்ரவதை செய்துள்ளார்.
தந்தையின் சித்ரவதை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரவீன், நவீன் ஆகிய இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சென்னைக்கு சென்று அங்குள்ள ஒரு தனியார் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளனர். அப்போது கடை உரிமையாளர் சிறுவர்கள் இருவரையும் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதையடுத்து 2 பேரும் சென்னையில் இருந்து ரெயிலில் திருச்செந்தூருக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து தட்டார்மடம் பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு வழி தெரியாமலும், பசி கொடுமையாலும் தவித்து கொண்டிருந்த 2 சிறுவர்கள் குறித்து அங்கிருந்த பயணிகள் தட்டார்மடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விரைந்து வந்து சிறுவர்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களது தந்தையின் கொடுமையால் நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து போலீசார் சிறுவர்களின் தந்தையான ராஜ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர் போலீஸ் நிலையத்திற்கு வராததால் 2 சிறுவர்களையும் தூத்துக்குடியில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
நன்றி: மாலைமலர்
