Breaking News

திசையன்விளை பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள்

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

thisayanvilai-area-leopards_cages-in-3-places_thisayanvilai.com

சுற்றித்திரியும் சிறுத்தை
நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள வாகநேரி, இட்டமொழி பகுதிகளில் குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டு இருக்கிறது.

சிறுத்தை அடித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் வீடுகளின் அருகிலேயே கட்டிப்போட்டு கண்காணித்து வருகின்றனர். இரவில் வீடுகளில் மின்விளக்குகளை எரியவிட்டு விழித்திருக்கின்றனர்.

சிறுத்தையை பிடிக்கும் முயற்சியாக நேற்று முன்தினம் இரவில் நெல்லையில் இருந்து வனத்துறையினர் இரும்பு கூண்டு ஒன்றை கொண்டு வந்தனர். அந்த கூண்டில் கட்டிப்போட ஆட்டுக்குட்டியும் கொண்டு வரப்பட்டது. ஆனால், கூண்டின் கதவு சரிவர இயங்கவில்லை. அதை சரிசெய்ய நள்ளிரவு வரை வனத்துறையினர் முயற்சி செய்தனர்.

நேற்று காலையில் நெல்லை மாவட்ட வன அலுவலர் ராஜூ தலைமையில், நெல்லை மாவட்ட வனச்சரகர் தார்த்தீஸ், தூத்துக்குடி மாவட்ட வனச்சரகர் நெல்லை நாயகம், திருச்செந்தூர் வனச்சரகர் லோகசுந்தரநாதன் மற்றும் வனத்துறையினர் வாகநேரி, இட்டமொழி பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

வாகநேரியில் குட்டியுடன் சிறுத்தைப்புலியை பார்த்தவர்களிடம் வன அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறுத்தைப்புலிகளின் கால் தடங்கள் பதிவாகி இருந்த பகுதிகள், தடுப்பணை பகுதி மற்றும் திசையன்விளை சாலையில் உள்ள முநதிரிக்காடு பகுதியிலும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

3 கூண்டுகள் தயார்
பழுதடைந்த கூண்டு நேற்று சரிசெய்யப்பட்டது. கூடுதலாகவும் 2 கூண்டுகள் நெல்லையில் இருந்து கொண்டு வரப்பட்டன. அந்த 3 கூண்டுகளிலும் ஆடுகள் கட்டப்பட்டு, முந்திரிக்காடு, வாகநேரியில் ஏற்கனவே சிறுத்தைப்புலி வந்து சென்ற இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்தப்பட்டன.

ஏற்கனவே நெல்லை பகுதியில் புகுந்த சிறுத்தைப்புலியை மயக்க ஊசி போட்டு பிடிக்க உதவிய நெல்லை கால்நடை டாக்டர் முத்து கிருஷ்ணனும் நேற்று வாகநேரி வரவழைக்கப்பட்டார். ஊருக்குள் சிறுத்தைப்புலி வரும்பட்சத்தில், மயக்க ஊசி போட்டு பிடிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மர்ம விலங்கு
இதற்கிடையே நேற்று அதிகாலை 5 மணி அளவில் சுவிசேஷபுரத்தில் இருந்து பாதிரியார் இமானுவேல், மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இட்டமொழி புதூர் அருகில் வந்தபோது, சாலையின் குறுக்கே 4 அடி உயரத்தில் ஒரு மர்ம விலங்கு ரோட்டை கடந்துள்ளது. அது சிறுத்தையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் வளர்க்கப்படும் உயரமான நாய் ஒன்று சாலையை கடந்திருக்கலாம் எனவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். அது நாயா–சிறுத்தையா? என்பது தொடர்பாகவும் வனத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply