சைபர் கிரைம் போலீசாருக்கு சவால்

திசையன்விளையில் போலி சிம் கார்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்மூலம் மாணவிகள், குடும்ப பெண்கள், சமூகத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக போலி சிம்கார்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. பிரபல நிறுவனங்கள் தங்களது விற்பனை பிரதிநிதிகளுக்கு சிம் கார்டுகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கின்றனர். இதற்காக கவர்ச்சிகரமான பரிசுகளும், இன்ப சுற்றுலாக்களும் உண்டு என்று அறிவிக்கின்றனர். அந்த டார்கெட்டை எட்டுவதற்காக அவர்கள் பல்வேறு தகிடுதத்தங்களில் ஈடுபடுகின்றனர். இதற்காக தங்கள் ஏரியாக்களில் உள்ள செல்போன் ரீசார்ஜ் கடைக்காரர்களை குறி வைக்கும் அவர்கள் போலி முகவரி ஆணவங்களை பெற்று சிம் கார்டுகளை விற்பனை செய்கின்றனர்.
வியாபாரிகளும் லாபம் கருதி கமுக்கமாக போலி சிம் கார்டுகளை விற்று தள்ளுகின்றனர்.ரீசார்ஜ் மற்றும் செல்போன் கடைக்காரர்களிடம் உள்ள உண்மையான (ஒரிஜினல் புரூப்) ரேஷன் கார்டு ஜெராக்ஸ், போட்டோக்களை வாங்கிச் செல்லும் விற்பனை பிரதிநிதிகள், ஒரு ரேஷன் கார்டு ஜெராக்ஸ் மற்றும் போட்டோவை வைத்து சுமார் 100 சிம் கார்டுகளை போலியாக விற்பனை செய்து விடுகின்றனர்.உண்மையான வாடிக்கையாளர்களின் ரேஷன் கார்டில் உள்ள எண், விலாசம், போட்டோ இந்த மூன்றையும் மாற்றி, மாற்றி போலி சிம் கார்டுகள் தயாரிக்கப்படுகிறது. போலி சிம்கார்டுக்குரிய விலாசம் சரியாக இருக்கும்பட்சத்தில் போட்டோ தவறானதாகவும் பெயர்கள் மாறியும் இருக்கும். ரேஷன் கார்டு எண் சரியாக இருந்தால் விலாசம் தவறாகவும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் மாறி, மாறியும் இருக்கும் வகையில் போலி சிம் கார்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்காக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவிலில் ஒரு கும்பலே இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த போலி சிம் கார்டுகள் விற்பனை நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை பகுதியில் ஜோராக நடைபெறுகிறது. குறிப்பிட்ட சில ரீசார்ஜ் கடைகளில் சர்வ சாதாரணமாக போலி சிம் கார்டுகள் கிடைக்கிறது. இதனை பெரும்பாலும் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். இதன்மூலம் சிலர் குடும்ப பெண்கள், மாணவிகளிடம் தவறாக பேசுகின்றனர். சிலர் மிஸ்டு கால் கொடுத்து ஆபாசமாக பேசுகின்றனர்.சமீபத்தில் திசையன்விளையை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட எண் திருச்செந்தூர் முகவரியில் இருந்தது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அது போலி முகவரியில் வாங்கப்பட்ட சிம்கார்டு என்பதும் சம்பந்தப்பட்ட முகவரியில் இருந்தவர்களுக்கு அதில் தொடர்பில்லை எனவும் தெரியவந்தது. இதுபோல் சிலர் போலி சிம்கார்டுகள் மூலம் முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்த சம்பவமும் நடந்துள்ளது. குறிப்பாக பெண்கள், மாணவிகள்தான் இதில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற புகார்கள் தொடர்ந்து போலீசில் குவிந்தவண்ணம் உள்ளது.போலி முகவரியில் சிம்கார்டுகள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் தெரியும். அவர்களும் தொழில் போட்டியில் இதனை கண்டுகொள்வதில்லை. சைபர் கிரைம் போலீசாருக்கு சவால் விடும் வகையில் போலி சிம்கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் முழு பின்னணியையும் கண்டுபிடித்து போலி சிம் கார்டுகளை கண்டறிந்து அவற்றை முடக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
நன்றி: தினகரன்