திசையன்விளை,
திசையன்விளை அருகே செல்லப்பிராணிக்கு கிராம மக்கள் ஊர் கூடி நினைவஞ்சலி கடைபிடித்தனர். இதையொட்டி நினைவஞ்சலி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.
திசையன்விளை அருகே நடந்த இந்த வினோத நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:–
நினைவு நாள் கடைபிடிப்பு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாடார் அச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாண சுந்தரம். இவர் செல்லமாக வளர்த்து வந்த டாமி என்ற நாய், கடந்த ஆண்டு நவம்பர் 30–ந் தேதி மரணம் அடைந்தது. அப்போது அவர் சென்னையில் இருந்தார். நாய் இறந்த தகவலை அவரது உறவினர்கள் கல்யாண சுந்தரத்துக்கு தெரிவித்தனர். உடனே அவர், நான் சென்னையில் இருந்து ஊர் திரும்பும் வரை நாய் டாமியை குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கும்படி கூறினார். அதன்படி குளிர்சாதன பெட்டியில் வைத்து பாதுகாக்கப்பட்டு, அவர் ஊர் திரும்பிய உடன் கிராம மக்கள் சேர்ந்து நாய் டாமியை அடக்கம் செய்தனர். அந்த நாயின் முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது.
சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன
இதையொட்டி, “எங்களிடம் பாசமாய் வளர்ந்த செல்லப்பிள்ளை டாமிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி” என அருகில் உள்ள கிராமங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. அவரது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நாய் டாமி படத்துக்கு குடும்பத்தினர் மாலை அணிவித்து வணங்கினர். அதனை தொடர்ந்து நாய் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்த நாய் டாமி படத்துக்கும் மாலை அணிவித்து, தேங்காய் பழம் படையலிடப்பட்டது. நாய் விரும்பி சாப்பிட்ட பரோட்டாவும் படையலில் இடம் பெற்றது. அங்கு கூடியிருந்த கிராம மக்கள் மலர் தூவி நாய் டாமிக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
நன்றி: தினத்தந்தி
